Published : 16 May 2018 08:00 AM
Last Updated : 16 May 2018 08:00 AM

மக்களின் நியாயமான போராட்டத்துக்கு எப்போதும் ஆதரவு: தூத்துக்குடியில் கமல்ஹாசன் உறுதி

“மக்களின் நியாயமான போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு எப்போதும் உண்டு” என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தென்மாவட்டங்களில் இன்றுமுதல் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களையும் சந்திப்பதே எனது சுற்றுப்பயணத்தின் நோக்கம். கட்சியை கட்டமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை நேரில் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பாகவே இந்த பயணத்தை கருதுகிறேன்.

பாலகுமாரனுக்கு இரங்கல்

பாலகுமாரன் எனது நீண்ட கால நண்பர். நல்ல எழுத்தாளர். சினிமாவில் மட்டுமல்ல, இலக்கியத்திலும் எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர். நாங்கள் இருவரும் சேர்ந்தும் எழுதியிருக்கிறோம். எங்களுக்குள் நல்லதொரு நீண்டகால நட்பு உண்டு. அவரது மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியை நிறுத்தி வைத்திருப்பது பொதுமக்கள் போராட்டத்துக்கான வெற்றியின் முதல் படியாகவே நினைக்கிறேன். இந்த போராட்டம் திடீரென ஏற்பட்டதல்ல, நீண்டகால போராட்டம். நியாயமான போராட்டம். மக்களின் நியாயமான போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு எப்போதும் உண்டு என்றார் அவர். பின்னர், அவர் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

சுற்றுப்பயண விவரம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 2 கட்டமாக கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்றுமுதல் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து இன்று (மே 16) காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தனது பயணத்தை தொடங்குகிறார். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று சுற்றுப்பயணம் செய்கிறார்.

நாளை (மே 17) திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் தனது பயணத்தை தொடங்குகிறார். வள்ளியூர், திசையன்விளை, உவரி வழியாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடுக்கு வருகிறார். திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், ஏரல், பண்டாரவிளை வழியாக மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். 18-ம் தேதி திருநெல்வேலி, விருதுநகரில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

2-ம் கட்ட பயணம்

முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் கமல், வரும் 19-ம் தேதி சென்னையில் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ள ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

பின்னர் 2-வது கட்டமாக ஜூன் 8-ம் தேதி திருப்பூர், 9-ம் தேதி நீலகிரி, 10-ம் தேதி கோயம்புத்தூரில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x