Published : 06 May 2018 04:02 PM
Last Updated : 06 May 2018 04:02 PM

கிருஷ்ணசாமி மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

தமிழக அரசு மரணமடைந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென்றும், அடுத்தாண்டிலிருந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறவும் உரிய அரசியல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "சிபிஎஸ்இ வாரியம் தேவையில்லாமல் தமிழகத்திலிருந்து பல ஆயிரம் மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத கட்டாயப்படுத்தியதின் மூலம் மாணவ - மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் தாங்க முடியாத மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார்கள். பலர் நீட் தேர்வு எழுதப் போக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, நீட் தேர்வு எழுதச் சென்ற தனது மகனுக்கு துணையாக சென்ற போது, கேரளாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

நீட் தேர்வை தடுக்க முடியாத மாநில அரசு குறைந்தபட்சம் வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுத அனுப்பப்பட்டதையாவது தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். மத்திய அரசு எதைச் செய்தாலும், அது தமிழகத்திற்கு எத்தனை கேடுகள் விளைவிப்பதாக இருந்தாலும் அதைப்பற்றி எவ்வித கேள்வியும் எழுப்ப முடியாத கையாலாகாத நிலையில் தமிழக அரசு இருப்பதையே மாநில அரசின் அணுகுமுறை காட்டுகிறது.

இச்சம்பவத்தை கேள்விபட்டதுடன், கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனோடும், முதலமைச்சர் அலுவலகத்தோடும் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு முன்னரே கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் நேரிடையாக தலையிட்டு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும் திருத்துறைப்பூண்டியில் வசிக்கும் கிருஷ்ணசாமியின் துணைவியாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை அதிகாரிகளும் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் இருந்து இறந்து போன கிருஷ்ணசாமி அவர்களின் உடலை பாதுகாப்பாக திருத்துறைப்பூண்டி அனுப்பி வைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்கள்.

தமிழக அரசு மரணமடைந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென்றும், அடுத்தாண்டிலிருந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறவும் உரிய அரசியல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மாணவர்கள் மற்றும் குடும்பங்கள் அனுபவித்துள்ள துயரங்கள், மாநில உரிமை, சிபிஎஸ்இ வாரியத்தின் போதாமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு மத்திய அரசு நீட்டிலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x