Published : 01 May 2018 08:55 AM
Last Updated : 01 May 2018 08:55 AM

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை வந்த பக்தர்கள் அவதி: போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மறியல்; சொந்த ஊர் திரும்புவதற்காக ரயில்களில் அலைமோதிய கூட்டம்

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் சிறப்புப் பேருந்துகளை இயக்காததைக் கண்டித்து பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறப்பு ரயில்களிலும் கூட்ட நெரிசலால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், 14 கி.மீ. தொலைவில் அண்ணாமலையை கிரிவலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, சித்ரா பவுர்ணமியையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், மீண்டும் ஊர் திரும்புவதற்காக பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர் போன்ற அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே நள்ளிரவு வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், தொலைதூர பேருந்துகள் நள்ளிரவுக்கு பிறகு இயக்கவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

“சென்னை, புதுச்சேரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி போன்ற ஊர்களுக்கு நள்ளிரவுக்கு பிறகு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருந்தோம். இரு மார்க்கங்களிலும் கூட்டம் இருக்கும்போது மட்டுமே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நள்ளிரவுக்குப் பிறகு, சிறப்புப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படவில்லை” என்றனர்.

திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு பல மணி நேரம் பேருந்துகள் இல்லாத காரணத்தால், தற்காலிகப் பேருந்து நிறுத்தமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பக்தர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை

தகவலறிந்த வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர், நீண்ட தாமதத்துக்குப் பிறகு புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப் பட்டன.

இதற்கிடையில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழுப்புரம் - திருப்பதி மற்றும் எதிர் மார்க்கத்தில் இருந்து காட்பாடி - விழுப்புரம் இடையே இயக்கப்பட்ட 3 பயணிகள் ரயில்களில் பக்தர்கள் முண்டியடித்து ஏறிச் சென்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன் ரயிலில் ஏற முடியாமல் அவதிப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x