Published : 02 May 2018 11:55 AM
Last Updated : 02 May 2018 11:55 AM

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் முழுமையாக நிரப்பவும், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள மாவட்ட தாலுகா அரசு மருத்துவமனைகளில் 31 சதவீத மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை உடனே நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரணம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய, சாதாரண மக்கள் தங்கள் உடல் நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளுக்குத் தான் செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது அரசு மருத்துவமனைகளில் உரிய மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றால் அதற்கான பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். இதனை காலத்தே செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

குறிப்பாக தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லாத சூழலில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்படும்.

இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் போன்றோருக்கு சிறப்பு மருத்துவம் பார்ப்பதற்கான முக்கிய மருத்துவர்கள் போதிய அளவில் இல்லாத சூழலும் உருவாகும். இந்த நிலை உருவாகாமல் இருக்க தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் உட்பட எந்த பணியிடமாக இருந்தாலும் அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு புறநோயாளியாக வருகின்றவர்களுக்கு தடை ஏதும் ஏற்படாமல் இருக்க 24 மணி நேர மருத்துவச் சேவையை தொடர்ந்து அளிக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருந்து மாத்திரைகள் இருப்பில் இருப்பதை தொடர் கண்காணிப்பின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் சுமார் 65 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக சுகாதாரத்துறை ஆரம்பக்கட்டத்திலேயே பன்றிக் காய்ச்சலின் தாக்கத்தை முறியடிக்க வேண்டும். இதன் தாக்கம் வருகின்ற ஜூன் மாதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

எனவே தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு உள்ளது.

குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை கிராமம் முதல் நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தி கோடை காலத்தில் ஏற்படும் நோய் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும், முதலுதவி மருத்துவ வசதிகள் குறித்தும், நோயின் பாதிப்பு குறித்தும், ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்க தமிழக சுகாதாரத்துறையும், தமிழக அரசும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தர தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x