Published : 29 May 2018 07:55 AM
Last Updated : 29 May 2018 07:55 AM

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம்: ஆசியாவின் பெரிய ரயில் சதுக்கமாகிறது- தினமும் 500 சர்வீஸ் இயக்க நிர்வாகம் முடிவு

ஆசியாவின் பெரிய சுரங்க மெட்ரோ ரயில் சதுக்கமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் உருவெடுத்து வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு கீழே 70,060 சதுர அடியில், சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தை பிரம்மாண்டமாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.400 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் இந்த ரயில் நிலையம் ஆசியாவின் பெரிய சுரங்க மெட்ரோ ரயில் சதுக்கமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தட மெட்ரோ ரயில்களும் இணையும் முக்கிய மையமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் திகழ்கிறது.

அதாவது, கோயம்பேடு, எழும்பூர் வழியாகச் செல்லும் மெட்ரோ ரயில், முதல் தளத்திலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் ரயில், 2-வது தளத்திலும் இங்கு வந்து செல்லும். தற்போது முதல் தளத்தின் 2 நடைமேடைகளில் இருந்து மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நாட்டிலேயே சென்னையில்தான் சுரங்கப்பாதையில் அதிகளவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆசியாவின் ‘பெரிய சுரங்க மெட்ரோ ரயில்’ சதுக்கமாக உருவாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2 தளங்கள் கொண்ட சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் 380 மீட்டர் நீளம், 33 மீட்டர் அகலம் கொண்டது. இங்கு பூங்கா நகர், ரிப்பன் மாளிகை, சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி, பின்புறத்தில் மற்றொரு வழிதடம் என மொத்தம் 6 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இங்குள்ள முதல் தளத்தில் இருந்து 2 நடைமேடைகள் மூலம் கோயம்பேடு, எழும்பூர் வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வழியாக விமான நிலையம் செல்லும் வழித்தடத்தில் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்காக, 2-வது தளத்தில் 2 நடைமேடைகள் அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன.

சென்ட்ரலில் மட்டும் மொத்தம் 6 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தினமும் இங்கிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதன்படி, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு தினமும் 500 சர்வீஸ்கள் இயக்கப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் சென்ட்ரலில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில்சேவை தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x