Published : 30 May 2018 09:33 AM
Last Updated : 30 May 2018 09:33 AM

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சட்டரீதியாக ஏற்புடையதா?: சட்ட நிபுணர்கள் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சட்ட ரீதியாக ஏற்புடையதா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சட்டத்தின் முன் நிற்காது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதுதான் தமிழக அரசின் நோக்கம் என்றால் அதற்கான விரிவான ஆதாரங்களைக் கொண்ட அரசாணையை அரசு வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறியிருப்பதாவது:

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்:

இந்த அரசாணையில் எந்த இடத்திலும் எதற்காக ஸ்டெர் லைட் ஆலையை மூட வேண் டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆலையை மூடுவதற்கான வலுவான காரணங்கள் எதுவும் அரசாணையில் இல்லை. இந்த அரசாணையைப் பிறப்பிக்கும் முன்பாக கற்றறிந்த சட்ட வல்லுநர்களிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில் முகிந்திர்சிங் கில் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, அரசாணையில் என்ன உள்ளதோ அதை மட்டும்தான் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். அதன்படி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக கண்துடைப்புக்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்:

இந்த அரசாணை நிச்சயமாக சட்டரீதியாக செல்லத்தக்க ஒன்று. தமிழக அரசு இப்படியொரு அரசாணையைப் பிறப்பித்துள்ளது என்பதே வரவேற்கத்தக்க ஒன்றுதான். இந்த அரசாணையில் சொல்லப்பட்டுள்ள காரணங்கள் வலுவாக இருக்கிறதா? இல்லையா? என்பது இப்போதைக்கு பிரச்சினை இல்லை. அதை படிப்படியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்.

மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜூதீன்:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆலையை இயக்குவதற்கான சான்றிதழை ஸ்டெர்லைட் நிர்வாகம் புதுப்பித்துவிட்டால் மீண்டும் ஆலையை இயக்குவதற்கு தடை இருக்காது. அவ்வாறு மனு செய்யும்போது சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து விட்டால் அந்த ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சான்றிதழை கட்டாயமாக சட்டரீதியாக கொடுத்தே ஆக வேண்டும். ஒவ்வொரு விதமான தொழிற்சாலைக்கும் அவை வெளியேற்றக்கூடிய நச்சுக்கழிவுகளின் அதிகபட்ச அளவு எவ்வளவு? என்பது விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையானது அந்த அளவைவிட அதிகமாக வெளியிட்டால் அதற்கு சட்ட ரீதியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளிக்கக்கூடாது. அதைமீறி அனுமதி கொடுக்கப்பட்டால் அதை எதிர்த்து எந்தவொரு பொதுமக்களும் பொதுநல நோக்குடன் வழக்குத் தொடரலாம்.

மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத்:

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் அரசின் முடிவை வரவேற்க வேண்டுமேயன்றி குறைகூறக்கூடாது. யாராக இருந்தாலும் சட்டப் பிரச்சினைகளை சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். யூனியன் கார்பைடு போல ஸ்டெர்லைட்டும் நிரந்தரமாக இயங்காது என்ற நம்பிக்கையை தமிழக அரசு மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என தமிழக முதல்வர் நேற்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x