Published : 06 May 2018 08:28 AM
Last Updated : 06 May 2018 08:28 AM

வணிகர்களை தாக்கும் அரசுகள்: இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வணிகர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடு, சென்னை வேலப்பன்சாவடியில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் ஏ.எம்.சதகத்துல்லா ஆகியோர் முன்னின்று நடத்திய இம்மாநாட்டில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வணிகர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதனால் ஒட்டுமொத்த வணிகர்கள் நிலை குலைந்துள்ளனர். வணிகர்களின் உரிமையை மட்டுமல்ல, மாநில அரசின் உரிமையையும் மீட்டெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வணிகர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட, தமிழகத்தில் திமுக ஆட்சியும், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியும் அமைய வணிகர்கள் துணை நிற்கவேண்டும்’’ என்றார்.

பொருளாதாரத்தின் முதுகெலும்பு

மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் பேசும்போது, ‘‘நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வணிகர்கள் உள்ளனர். அவர்களின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எந்த நிலையிலும் தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், அந்நிய முதலீடுகளை சில்லரை வியாபாரத்தில் நுழைய விடமாட்டோம் என்று உறுதி எடுத்தார். அவர் வழியில், வணிகர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வணிகர்கள் கோரிக்கையை ஏற்று 58 பொருட்களுக்கான வரிகளைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. ஏராளமான வணிகர்கள் குடும்பத்தினருடன் மாநாட்டில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x