Published : 12 May 2018 08:28 PM
Last Updated : 12 May 2018 08:28 PM

மன்னார்குடி மெர்கன்டைல் வங்கிக் கொள்ளை: ஊழியர் உட்பட 4 பேர் கைது

 மன்னார்குடி மெர்கன்டைல் வங்கியில் கடந்த வாரம் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட வங்கி ஊழியர் உட்பட4 பேரை கைது செய்த போலீஸார் 2 கார், துப்பாக்கி மற்றும் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 8-ம் தேதி காரில் வந்த 5 பேர் முகத்தில் கர்ச்சீப் அணிந்தபடி உள்ளே நுழைந்து வங்கியில் உள்ளவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கியின் லாக்கர் சாவியைப் பறித்தனர். பின்னர் லாக்கர் அறையைத் திறந்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றனர்.

நகைகள் இருக்கும் லாக்கரை எவ்வளவு முயன்றும் திறக்க முடியாததால், இதற்கு மேல் இருந்தால் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து கேஷியரிடம் இருந்த ரூ.6 லட்சம், மற்றும் மேஜையில் இருந்த 10 சவரன் அடகுக்கு வந்த நகைகளை மட்டும் கொள்ளையடித்து விட்டு அனைவரையும் மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர். லாக்கரைத் திறக்க முடியாததால் அதில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பின.

போகும்போது தாங்கள் சிக்கி விடாமல் இருக்க உஷாராக வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேமிக்கும் ‘ஹார்டுடிஸ்க்’கையும் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். போலீஸுக்கு போன் செய்யாமல் இருக்க வங்கி ஊழியர்களின் அனைத்து செல்போன்களையும் பிடுங்கிக் கொண்டு சென்றனர்.

கொள்ளை குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ் மன்னார்குடி போலீஸில் புகார் அளித்ததன் பேரில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட எஸ்.பி, மயில்வாகனன் நேரில் வந்து மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு போலீஸார் ஆய்வு செய்தனர்.

கொள்ளையர்கள் போலீஸில் சிக்கக்கூடாது என்பதற்காக மிகவும் முன் ஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளதால் இது போன்ற விஷயங்களில் தேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் கருதி விசாரணையை முடுக்கிவிட்டனர். கொள்ளையர்கள் அடையாளத்தைக் காண படம் வரைந்து பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். போலீஸ் விசாரணையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய டாடா இண்டிகா காரின் புகைப்படம் சிக்கியது.

அந்தக் காரின் எண்ணை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தியபோது டாடா இண்டிகா கார், தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச்சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவர் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர்கள் மீரான்மொய்தீன், சுடலை மணி ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் வங்கியை கொள்ளையடிக்க திட்டம் வகுத்துக் கொடுத்தது திருச்சி, மணப்பாறை மெர்கன்டைல் வங்கி கிளையின் ஊழியர் மரியசெல்வம் என்பது தெரியவந்தது. அவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கார்கள், ஒரு துப்பாக்கி, ஒரு போலி துப்பாக்கி, ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் கைப்பற்றினர். கொள்ளை சம்பந்தப்பட்ட மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x