Published : 01 May 2018 08:45 AM
Last Updated : 01 May 2018 08:45 AM

இன்று உழைப்பாளர்கள் தினம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்: தேசத்தின் பொருளாதாரத்திற்கு முக்கிய கட்டமைப்பாக விளங்கும் தொழிலாளர் வர்க்கத்தை கவுரவிக்கும் விதமாக மே தினம் கொண்டாடப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வரும் தொழிலாளர் வர்க்கத்தை நம்பியே பொருளாதார பலமும் அடங்கியுள்ளது. இந்த தருணத்தில் தொழிலாளர்களுக்கு எனது இதயம் நிறைந்த மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் கே.பழனிசாமி: உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு உலகை வாழ வைக் கும் உழைப்பாளர்கள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் திருநாளாகவும், மே தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் தொழிலாளர்கள் அனைவரும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: மே நன்னாளில் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முதுகெலும்பாகத் திகழும் உழைக்கும் தோழர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக என்றைக்கும் முன்னணியில் நின்று, இறுதிவரை திமுக போராடும் என்ற உறுதியை தொழிலாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. அத்தகைய உழைப்பை வழங்கி தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்துக்கு மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என்று மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு எந்த அங்கீகாரமும், பணிப் பாதுகாப்பும் இல்லை. அதனால் அவர்கள் உரிமைகளை கோர முடியாமல் அடிமைகளாக வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்காக அனைவரும் இணைந்து மீண்டும் ஒரு உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன்: போராட்டங்கள் மூலமே தொழிலாளர்கள் வர்க்க உரிமைகளை, மக்கள் நலனை பாதுகாக்க முடியும் என்பதே எதிர்காலம் விடுக்கும் செய்தியாகும். உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி போராட்டக் களத்தை விரிவாக்கம் செய்ய, இந்த மே நாளில் உறுதியேற்போம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: வேலை உத்தரவாதம், ஊதிய உயர்வு, வைப்புநிதி உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்புத் திட்டங்கள் யாவும் மத்திய பாஜக அரசால் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், சுரண்டலற்ற, சாதிமத பேதமற்ற, புதியதோர் உலகம் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். இந்நாளில், புதியதோர் உலகு செய்ய உறுதியேற்போம்.

விசிக தலைவர் திருமாவளவன், டிடிவி தினகரன் எம்எல்ஏ, சமக தலைவர் ஆர்.சரத்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் ந. சேதுராமன் உள்ளிட்டோரும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x