Last Updated : 01 May, 2018 08:53 AM

 

Published : 01 May 2018 08:53 AM
Last Updated : 01 May 2018 08:53 AM

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் பரிந்துரைக்கும் குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ்மொழி புறக்கணிப்பா?: தமிழக கட்சி தலைவர்கள் அறிக்கையால் குழப்பம்

குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ்மொழி தவிர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்த விருதுகள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் தனியாக அளிக்கப்பட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவருக்கான விருதுகளில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறி மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். விருதுகள் பற்றி முழு விவரம் அறியாமல் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழ்மொழிக்கான செவ்வியல் விருதுகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 8 விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, தொல்காப்பியர் விருது, ஓர் இந்தியருக்கு வழங்கப்படுகிறது. குறள்பீடம் விருது வெளிநாடுவாழ் இந்தியர், வெளிநாட்டவர் என இருவருக்கு அளிக்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, இளம் அறிஞர்களுக்கான 5 விருதுகளும் வழங்கப்படுகின்றன. இவற்றில் முதல் 3 விருதுகளுடன் ரூ.5 லட்சமும், மற்ற 5 விருதுகளுடன் ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து முன்னாள் பொறுப்பு அலுவலரான பேராசிரியர் ராமசாமி, ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழுக்கு மட்டுமே செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தன்னாட்சி அதிகாரமும் இருப்பதால் தமிழ்மொழிக்கான குடியரசுத் தலைவர் விருதுகள், இந்த ஆய்வு நிறுவனம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற மொழிகளுக்கு இதுபோன்று ஓர் ஆய்வு நிறுவனம் இல்லாததால், அதன் விருதுக்கான பரிந்துரையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செய்து வருகிறது. செம்மொழியைப் பொறுத்தவரை 2016-17- ம் ஆண்டுக்கான விருது வரை வழங்கப்பட்டுவிட்டது. 2017-18-ம் ஆண்டுக்காக பரிந்துரைகள் பெற்று பரிசீலனையில் உள்ளன” என்று தெரிவித்தார்.

‘தி இந்து’வில் வந்த செய்தி

2005-06-ம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுகள், கடந்த 2010-ல் 3 வருடங்களுக்கு ஒன்றாக சேர்த்து வழங்கப்பட்டது. 2013 அக்டோபரில் 2 கல்வி ஆண்டுகளுக்கு ஒன்றாக வழங்கினர். இந்த தாமதம் குறித்த செய்தி கடந்த அக். 10, 2013-ல் ‘தி இந்து’வில் வெளியாகி இருந்தது.

இதற்கு, விருதுகளின் முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு இயக்குநர் முதல் அலுவலர்கள் வரை நிரந்தரமாக யாரையும் பணி அமர்த்தாமல் இருப்பது ஒரு முக்கியக் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

தமிழ் வளர்ச்சித்துறை மறுப்பு

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் தொல்காப்பியர் விருது ஒருவருக்கும், குறள் பீட விருது இருவருக்கும், இளம் அறிஞர் விருது ஐந்து பேருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2005 முதல் 2016 வரை 66 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது மட்டுமின்றி தன்னாட்சி அளிக்கப்பெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டு வரும் வேளையில், இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x