Published : 22 Apr 2018 08:42 AM
Last Updated : 22 Apr 2018 08:42 AM

எஸ்.வி.சேகர் மீது கடும் நடவடிக்கை: தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

இணையதளங்களில் வரம்பு மீறி தவறான தகவல்களை பாஜக நிர்வாகிகள் பதிவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இணையதளங்களில் தவறான தகவலை பாஜக நிர்வாகிகள் பதிவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் இணையதளத்தில் வெளியிட்ட தகவல் குறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் எனது கவனத்துக்கு கொண்டு வந்த 10 நிமிடங்களில், அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தொடர்ச்சியாக அந்த தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்ட பின்னரும், பதிவுகள் பகிரப்படுகின்றன.

இணையதளங்களில் வரம்பு மீறி தவறான தகவல்கள் பாஜக நிர்வாகிகள் பதிவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இணையதளத்தில் வரம்பு மீறல்கள் குறித்து பாஜக சார்பில் கண்காணிக்க குழு அமைக்கப்படும். பெண்கள் பாதிப்படையும்போது, எந்த கட்சி என்று பார்க்காமல் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நாமக்கல்லில் நடந்த கட்சிக் கூட்டத்தின்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி பிரச்சினை சட்ட ரீதியாக தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நிர்மலாதேவி வழக்கு சரியான திசையில் விசாரிக்கப்பட வேண்டும்.

தமிழக ஆளுநர் நேர்மையான, பலம் பொருந்திய ஆளுநராக இருக்கிறார். இதை பொறுத்துக்கொள்ளாமல் அவரை அரசியல்ரீதியாக அசைக்கப்பார்க்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானம் கொண்டுவரக்கோரி மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் அளித்துள்ள நோட்டீஸில் திமுக உறுப்பினர்கள் கையெழுத்துப்போடவில்லை. இந்த பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ளாகவே எதிர்ப்பு இருக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x