Published : 28 Apr 2018 08:35 AM
Last Updated : 28 Apr 2018 08:35 AM

திரும்பிய பக்கமெல்லாம் அலைமோதும் கூட்டம்: மதுரையில் கரைபுரண்டோடும் சித்திரை திருவிழா உற்சாகம்

மதுரை மீனாட்சி அம்மன், அழகர்கோயில் சித்திரை திருவிழாக்களால் திரும்பிய பக்கமெல்லாம் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.17-ம் தேதி தொடங்கியது. சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் தினமும் உலா வந்தனர். முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் ஏப்.26-ல் நடந்தது. அன்று முதலே மதுரையின் ஆட்சியை மீனாட்சி ஏற்றார். வரும் 4 மாதங்களுக்கு மீனாட்சி அம்மனின் ஆட்சிதான் நடக்கும். மறுநாள் திக்குவிஜயம் சென்ற மீனாட்சிக்கு அஷ்ட திக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடந்தது.

இதைத் தொடர்ந்து பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதற்காக கோயில் ஆடி வீதிகள், சித்திரை வீதிகள் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர். இதற்காக அதிகாலை 3 மணி முதலே கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சித்திரை திருவிழா தொடங்கியதுமே தினமும் 2 முறை வலம் வரும் சுவாமி, அம்மனை தரிசிக்க வரும் கூட்டத்தால் மதுரையில் உற்சாகம் களைகட்டியுள்ளது. பட்டாபிஷேகம் நடந்ததும் மதுரை விழாக்கோலம் பூண்டது. அன்று முதல் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் 3 மடங்காக அதிகரித்தது. மாசி வீதிகளில் நள்ளிரவு வரை கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

பழைய திருக்கல்யாண மண்டபத்தில் 6 மணி நேரம் வரை காத்திருந்து மீனாட்சி அம்மனை மணக்கோலத்தில் நேற்று தரிசித்தனர். நேற்றிரவு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்ட ஆனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன் மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்தார். இன்று அதிகாலை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு சுவாமியும், அம்மனும் தேரில் எழுந்தருளுவர். இன்று நடைபெறும் தேரோட்டத்துடன் மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

இந்த உற்சாகத்தை சிறிதும் குறைத்துவிடாத அளவிற்கு இன்று மாலையே கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். மீனாட்சி கோயில் திருவிழா பெண்களிடம் பக்தியை ஏற்படுத்துவதில் முதலிடம் பிடிக்கும் என்றால், கள்ளழகர் புறப்பட்டதும் பட்டிதொட்டி முதலே ஆட்டம், பாட்டத்துடன் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும்.

‘அழகர் வாராரு’ என்ற பாடலுடன் அதிரும் இசை ஒலிக்கும்போதே தனி உற்சாகம் புகுந்துவிடுகிறது. கடந்த ஒரு வாரமாக இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் அழகர் வேடமணிந்த ஏராளமான பக்தர்கள் வீடு,வீடாக தேடிவந்து ஆசி வழங்கி வருகின்றனர்.

நாளை காலை மதுரைக்குள் அழகர் நுழைந்ததும் சாரைசாரையாய் மக்கள் அவரை எதிர்கொண்டு அழைத்து சேவிக்கும் எதிர்சேவை நடைபெறும். தொடர்ந்து 435 மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி நாளை மறுநாள் (ஏப்.30) காலையில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து மதுரையில் 3 நாட்கள் உலா வரும் அழகர் 3-ம் தேதி மீண்டும் மலைக்கு புறப்படுகிறார். மலையிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு 40 கி.மீ. தூரம் வரை உலா வருவதும், 6 நாள் விழாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதும் எங்கும் இல்லாத சிறப்பு.

வைகையில் அழகர் இறங்கும் நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல லட்சம் பக்தர்கள் திரள்வர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை பல்வேறு துறைகளும் இணைந்து மேற்கொள்கின்றன. 5,000 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி கோயில், அழகர் கோயில் விழாக்கள் என சித்திரை திருவிழா பக்தியில் மதுரை மக்கள் திளைத்துள்ளனர். நாளுக்கு நாள் இத்திருவிழாவின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், திரும்பிய பக்கம் எல்லாம் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x