Published : 16 Apr 2018 12:29 PM
Last Updated : 16 Apr 2018 12:29 PM

தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா?-ராமதாஸ் வேதனை

குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளால் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவருகிறதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

“காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இதயத்தை கிழிப்பதாக உள்ளன. இத்தகைய கொடுமைகள் உலகில் யாருக்கும் நிகழக்கூடாது. காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் உள்ள பெயர் அறியப்படாத கிராமத்தைச் சேர்ந்த முகமது யூசுப் புஜ்வாலா என்பவரின் 8 வயது மகள் ஆசிஃபா பானு. அவர்கள் குஜ்ஜார்ஸ் எனப்படும் இஸ்லாமிய நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

8 வயது குழந்தையான ஆசிஃபா கடந்த ஜனவரி 10-ம் தேதி வழக்கம்போல குதிரைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றாள். அன்றிரவு குதிரைகள் வீடு திரும்பின, ஆனால், ஆசிஃபா வீட்டுக்கு வரவில்லை. அவரது பெற்றோர்களும், உறவினர்களும் தேடினார்கள். ஆனால், பயனில்லை. ஜனவரி 12-ம் தேதி காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகாரை வாங்கிய காவல் அதிகாரி, ”உனது மகள் யாருடனாவது ஓடியிருப்பாள்” என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்.

சிறுமியை கண்டுபிடிக்க விசாரிப்பது போல காவல்துறையினர் நடித்தாலும், உண்மையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின் ஜனவரி 17-ம் தேதி அங்குள்ள புதரில் கொல்லப்பட்ட நிலையில் ஆசிஃபாவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆசிஃபாவின் பெற்றோர் அங்கு சிறிதளவு நிலம் வாங்கியிருந்தனர். அங்கு ஆசிஃபாவின் உடலை புதைக்க முயன்றபோது, அப்பகுதியிலுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த சிலர் உடலை அங்கு புதைக்கக்கூடாது என்று கூறி விரட்டியடித்தனர். அதனால் உடலை அடுத்த ஊருக்கு எடுத்துச் சென்று பெற்றோர் புதைத்தனர். அதன்பின் சில காலம் அங்கு வசித்த பெற்றோர், உயிருக்கு பயந்து அண்மையில் வேறு ஊருக்கு சென்று விட்டனர்.

8 நாட்களுக்கு பாலியல் கொடுமை

ஆசிஃபாவுக்கு நடந்த கொடுமை மனிதாபிமானம் கொண்டவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. ஜனவரி 10-ம் தேதி ஆசிஃபாவை அவளது நண்பன் ஒருவன் மூலம் சிலர் பிடித்து கடத்தினர். பின்னர் அங்குள்ள கோவிலுக்கு கொண்டு சென்ற அவர்கள் 8 நாட்கள் கோவிலில் வைத்திருந்து, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் சிறுமியை படுகொலை செய்து அங்குள்ள புதரில் வீசியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள். இவர்கள் ஆசிஃபாவின் குடும்பத்திற்கு உதவுவது போல நடித்தனர் என்பது தான் இன்னும் கொடுமையான விஷயம்.

இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்படும் அளவுக்கு அந்த சிறுமி என்ன தவறு செய்தாள்? ஆசிஃபாவின் குடும்பத்தினர் மலைவாழ் மக்கள் என்பதால் அங்குள்ள வனப்பகுதி நிலங்களை பயன்படுத்தத் தொடங்கினர். நாடோடிகளாக இருந்த அவர்கள் அப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினர்.

இதனால் நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக அவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன. ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை ஜம்முவில் இந்துக்களும், காஷ்மீரில் இஸ்லாமியரும் பெரும்பான்மையாக இருப்பார்கள்.

ஜம்முவில் குஜ்ஜார்ஸ் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிரந்தரமாகத் தங்கினால் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரித்து விடும். அதைத் தடுக்க நினைத்த இந்து மதத்தைச் சேர்ந்த சில வெறியர்கள், அங்குள்ள இஸ்லாமியரை மிரட்டி வெளியேற்ற நினைத்தனர். இதற்காகத் தான் குழந்தை ஆசிஃபாவை சிதைத்துக் கொன்றனர்.

கொலையாளிகளை ஆதரிக்கும் பாஜக

இதில் கொடுமை என்னவென்றால் ஆசிஃபாவைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தியது தான். இப்போதும் ஆசிஃபா குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தரப் போராடும் வழக்கறிஞர் தீபிகாவுக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது.

குஜராத் சோகம்

இந்த சோகம் மறைவதற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்ப்பட்டிருக்கிறார். அவரது உடலை வீசி எறிந்து விட்டு கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அந்த சிறுமியை வெறியர்கள் 8 முதல் 10 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சூரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெயரும், அடையாளமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை சீரழித்துக் கொன்ற கயவர்களின் விவரமும் இன்னும் தெரியவில்லை. ஆனால், அந்த சிறுமியின் உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அந்த சிறுமிக்கு எத்தகைய கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கும் என்பதை உணரலாம். இந்த வழக்கின் விசாரணையில் இன்னும் கூடுதலான அதிர்ச்சிகள் வெளியாகக் கூடும்.

உத்தரப்பிரதேசக் கொடுமை

இதே போன்ற கொடூரம் உத்தரப்பிரதேசத்திலும் நடந்திருக்கிறது. லக்னோவில் உள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு கடந்த 8-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வந்த சிறுமி ஒருத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றாள்.

அவளைப் பிடித்து விசாரித்த போது தான் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த அச்சிறுமியை அந்தத் தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் ஷெங்கார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. ஆனால், அதன்பிறகும் சிறுமியின் புகார் மீது உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, சிறுமியின் தந்தையை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், காவல்நிலையத்திலேயே அடித்துக் கொன்று விட்டனர். இதனால் இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்சினையாக வெடித்தது. அப்போதும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆணையிட்டதுடன் சம்பந்தபட்ட சட்டமன்ற உறுப்பினரை கைது செய்யவும் ஆணையிட்டனர். அதன்பிறகு தான் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டு உதாரணங்கள்

தமிழ்நாட்டிலும், இந்த அளவுக்கு கொடூரமாக இல்லாவிட்டாலும், மனிதத்தன்மைக்கு ஒவ்வாத வகையில் பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 6 வயது ஹசீனா, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 8-ம்வகுப்பு மாணவி புனிதா, திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்த 4 வயது குழந்தை மகாலட்சுமி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியில் தன்ராஜ் என்ற கொடியவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சரஸ்வதி என்ற எட்டாம் வகுப்பு மாணவி அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். அதே காரைக்காலில், தமிழ்நாட்டின் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் ஆதரவுடன் ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட எவரும் இன்று வரை தண்டிக்கப்படவில்லை என்பது சோகம்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

இத்தகையக் குற்றங்களுக்கு காரணமாக குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

இதை எதிர்த்து எங்கு மேல் முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால் அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x