Published : 29 May 2024 02:44 PM
Last Updated : 29 May 2024 02:44 PM

“மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது” - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி

சென்னை: ‘மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். இது தான் அவரது அன்றைய உண்மையான நிலைப்பாடு. அந்த செய்தித்தாளில் வந்தது இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்கு காட்டுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம்.

ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக ஒடிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும் மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுக நீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை.

தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பி அண்ணாமலை,தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது. முல்லை பெரியாறு விவகாரம்,மேகேதாட்டு - காவிரி விவகாரம்,பாலாறு விவகாரம் என தமிழகத்தைச் சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணுக்கு பேராபத்து நேர உள்ளது. இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும், தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும்,தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.

மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?

தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்!’, என்று அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன், ராமர் கோயில் - பாபர் மசூதி விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உரையையும், ஆடியோப் பதிவாக அவர் இணைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x