Last Updated : 12 Apr, 2018 02:13 PM

 

Published : 12 Apr 2018 02:13 PM
Last Updated : 12 Apr 2018 02:13 PM

திருக்குறள் கூறி பேச்சைத் தொடங்கிய பிரதமர் மோடி

 காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் நடந்து வரும் பாதுகாப்பு துறையின் கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி திருக்குறளைக் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 11-ம் தேதி தொடங்கிய கண்காட்சி 14-ம் தேதிவரை நடக்கிறது.

ஏறக்குறைய ரூ.800 கோடி செலவில் கடந்த 2 மாதங்களாக இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்து இருக்கிறது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அவர்களின் ஆயுதங்கள், தளவாடங்கள், கண்டுபிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் 9.25 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து கார் மூலம் ராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு 9.50 மணிக்கு பிரதமர் சென்றார்.

திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கும் முன் அனைவருக்கும் காலை வணக்கம் என்று தமிழில் கூறிய பிரதமர் மோடி திருக்குறளில் பொருட்பாலில், கல்வி அதிகாரத்தில் ஒரு குறளைக் கூறி பேச்சைத் தொடங்கினார்.

திருக்குறளின் பொருட்பாலில், கல்வி அதிகாரத்தில் 396-ம் குறளாக வரும்

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு’ என்ற குறளை கூறி பிரதமர் மோடி பேச்சைத் தொடங்கினார்.

அதுமட்டுமல்லாமல், குறளுக்கு விளக்கமாக, ஆற்று மணலில் நாம் எந்த அளவுக்கு தோண்டுகிறோமோ அந்த அளவுக்கு நீர் ஊறும். அதோபோல் மக்கள் கல்வி கற்க, கற்க அறிவு வளர்ச்சி பெறும் என்று பிரதமர் மோடி விளக்கமளித்தார்.

இதைக்கேட்டதும், அரங்கில் இருந்தஅனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.

மிகச்சிறந்த மாநிலமான தமிழகத்தில் இந்த சிறப்பு வாய்ந்த இடத்தில் கூடியிருக்கும் உங்கள் முன் பேசுகையில் நான் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகம் என்பது சோழ அரசர்கள் காலத்திலேயே மிகப்பெரிய கடற்படை வைத்திருந்த பெருமைக்கு உரியது என்று பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x