கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கின் விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு விசாரணையை ஜூன்15-ம் தேதிக்கு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மாணவியின் தாயார் செல்வி தாக்கல் செய்துள்ள மனுவில், சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவிக்கப்பட்ட பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகாவை மீண்டும் வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை மிகவும் தெளிவான முறையில் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஸ்ரீராம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் ஆஜராக வில்லை. அப்போது, மாணவியின் தாய் செல்வி நேரில் ஆஜரானார்.

அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவசந்திரன் ஆஜராகி விளக்கம் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் நடந்த நாளன்று பள்ளி நிர்வாகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் 26 சிசிடிவி கேமரா பதிவுகளை, மாணவியின் தாயாருக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஏற்கெனவே வழங்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் திறக்கப்படாதது குறித்து, வல்லுநர்களைக் கொண்டு, ஆய்வு செய்து அதற்கான உரிய விளக்கத்தை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in