Last Updated : 26 May, 2024 04:44 PM

1  

Published : 26 May 2024 04:44 PM
Last Updated : 26 May 2024 04:44 PM

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் இருந்து, அதற்கான விவரங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் பெற்று வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அக்கால சூழலில், கட்டிட வசதி ஏற்படுத்த போதிய நிதியாதாரம் இல்லாத நிலையில், அந்தந்த பகுதி முக்கிய நபர்களின் பங்களிப்போடு பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டன. அந்தப் பள்ளிகள் பிற்காலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாறின. அதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் நியமனமும் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளும் அனுமதி அரசால் வழங்கப்பட்டது. அந்தஅனுமதி இதுநாள் வரையில் தொடர்கிறது.

அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிக்கு நிகராகவே இருந்து வந்தது. காலப் போக்கில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தததால் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும், அவ்வாறு குறைந்த எண்ணிகையில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒதுக்கீடு அளவு குறையவில்லை.

இதனால் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் மாறுபட்டு, 90 மாணவர்கள் பயிலும் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலை உள்ளது. இதை சரி செய்யும்நோக்கில், எந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெறுகிறாரோ அதுகுறித்த தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும், இது நாள் வரை ஓய்வுபெறும் தகவல் குறித்து தெரிவிக்காமல், தொடர்ந்து ஆசிரியர் நியமனத்தை செய்து வருவதாக தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறும் போது,“ஒரு பள்ளியில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 2,000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

உதாரணத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 72 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,223 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த 72 பள்ளிகளில் 279 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதன்படி சராசரியாக 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. அரசு பள்ளி விகிதாச்சாரத்தை விட இது குறைவு இந்தச் சூழலில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள், உபரி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வது தொடர்பாக கருத்து கேட்டு தொடக்க கல்வி அலுவலர்களால் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேற்று முன்தினம் முதல் அழைக்கப்பட்டு, அவர்களிடம் ஆசிரியர்கள் பணியிடம் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு குறைக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை கருதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x