Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM

8 மாதங்கள் ஆகியும் விதவை உதவித்தொகை வழங்கப்படவில்லை: அம்மா திட்ட முகாமில் மூதாட்டி புகார்

அம்மா திட்ட முகாமில் விண்ணப் பித்து 8 மாதங்கள் ஆகியும் கணவரை இழந்த தனது மகளுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கவில்லை என்று மூதாட்டி ஒருவர் புகார் கூறியுள்ளார்.

சென்னையில் கிண்டி, புரசைவாக்கம், அயனாவரம், வேளச்சேரி, எழும்பூர் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில் நுங்கம் பாக்கத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு வந்திருந்த பாத்திமா என்ற மூதாட்டி கூறியதாவது:

எனது மகள் மின்னல் கணவனை இழந்தவர். மன நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. மின்னலுக்கு விதவை உதவித் தொகை வேண்டி கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி, இதே இடத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் மனு அளித்தோம்.

அதிகாரிகளும் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் விண்ணப் பித்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து தற்போது நடைபெற்று வரும் முகாமில் கேட்டபோது ஓரிரு மாதங்களில் கிடைத்துவிடும் என்கிறார்கள்.

என் மகளின் சிகிச்சை செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்படுகிறோம். உதவித் தொகை விரைவாக கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து எழும்பூர் வட்ட முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பிரிவு அலுவலர்களிடம் கேட்டபோது, “பல்வேறு உதவித்தொகைகளை வழங்குவதற்கான நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களில் பயனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுவிடும்” என்றனர்.

ஓய்வூதியப் பிரிவு துணை ஆட்சியர் காளிதாஸ் இதுபற்றி கூறும்போது, “உரியவர்களுக்கு உதவித்தொகைகளை உடனுக்குடன் வழங்கிவருகிறோம். சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு வராதது குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கிறேன். பயனாளியும் ஆட்சியர் அலுவலகம் வந்து நிலவரத்தை தெரிந்துக்கொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x