Published : 16 Apr 2018 08:23 AM
Last Updated : 16 Apr 2018 08:23 AM

இயற்கை எழில் நிறைந்த மலைப் பகுதிகளான குற்றாலம், தென்மலைக்கு ஐஆர்சிடிசி புதிய கோடை சுற்றுலா: ஐஆர்சிடிசி விரைவில் அறிவிப்பு

கோடை விடுமுறையை முன்னிட்டு மக்களைக் கவரும் வகையில் தென்காசி, குற்றாலம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து புதிய சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி விரைவில் அறிவிக்க உள்ளது.

இந்திய ரயில்வேயில் சுற்றுலா வாய்ப்பு உள்ள பாதைகளைக் கண்டறிந்து, புதிய சுற்றுலா திட்டங்களைச் செயல்படுத்துமாறு சமீபத்தில் நடந்த மண்டல அதிகாரிகள் கூட்டத்தில் ரயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோஹானி அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் இயற்கை சூழல் நிறைந்த காட்டுவழிப் பாதை, அருவிகள், ஆற்றுப்பாதை, மலைத்தொடர் உள்ளிட்ட இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ரயில் பாதைகளை ஒட்டி உள்ள இயற்கை எழில் நிறைந்த இடங்களைப் பயணிகள் கண்டுகளிக்க, கண்ணாடிப் பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில்களை இயக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, செங்கோட்டை - புனலூர் இடையே 112 ஆண்டு கள் பழமை வாய்ந்த மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.320 கோடி செலவில் நடந்த இப்பணி கடந்த மாதம் நிறைவடைந்து, தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 45 கி.மீ. தொலைவு கொண்ட இந்தப் பாதை, மேற்குத் தொடர்ச்சி மலை ஊடாக சென்று கேரளாவை இணைக்கிறது. வரும் கோடை விடுமுறையில் குற்றாலம், தென்மலை போன்ற பகுதிகளை இணைத்து புதிய சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி விரைவில் அறிவிக்க உள்ளது.

இதுதொடர்பாக ‘தி இந்து’ விடம் ஐஆர்சிடிசி அதிகாரிகள் மேலும் கூறியபோது, ‘‘தெற்கு ரயில்வேயில் செங்கோட்டை - புனலூர் இடையே அகலப்பாதை பணி நிறைவடைந்து, ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இந்த வழித்தடத்தில் தென்காசி, தென்மலை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து புதிய சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சுற்றுலா ரயில் புறப்படும். 2 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு வாரம்தோறும் செயல்படுத்த உள்ளோம்’’ என்றனர்.

தென்மலையான தேன்மலை

குற்றாலத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருக்கிறது தென்மலை. நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலா (எக்கோ டூரிசம்) இங்குதான் உருவாக்கப்பட்டது. மலைப்பகுதியான இங்கு தேன் அதிகமாக கிடைத்ததால் தேன்மலை என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, தென்மலையானதாக கூறப்படுகிறது.

அழகிய நீருற்று, இயற்கையை பாதிக்காத வகையில் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரோப்வே, தொங்கு நடைபாலம், மான்கள் மறுவாழ்வு மையம், சூழ்நிலை கல்வி மையம், பொழுதுபோக்கு படகு குழாம், கல்லடை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கும் நடைபாலம் என ஒருநாள் முழுக்க சுற்றிப் பார்த்து ரசிக்கும் வகையில் இங்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இதனால் இங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x