“சம்மன் வந்தால் பதில் அளிப்பேன்” - சபாநாயகர் அப்பாவு உறுதி @ நெல்லை காங். தலைவர் மர்ம மரண வழக்கு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களை சபாநாயகர் அப்பாவு சந்தித்துப் பேசினார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களை சபாநாயகர் அப்பாவு சந்தித்துப் பேசினார்.
Updated on
2 min read

திருநெல்வேலி: ‘திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சம்மன் வந்தால், நானும் பதில் அளிப்பேன்’ என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் ராதாபுரம் விசிக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் குடும்பத்தினர் காரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டதில் விஜயகுமாரின் மனைவி சந்தனகுமாரி மற்றும் அவரது சகோதரி முத்துச்செல்வி ஆகியோர் உயிரிழந்தனர். மேலம், 11 பேர் காயம் அடைந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர்களை, தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு இன்று (மே 24) சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒடிசா மாநிலம் புரி ஜெகநாதர் கோயில் பொருட்களை திருடியதாக பொருள்படும் வகையில், அதன் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் தேர்தல் பரப்புரையின் போது பேசியிருக்கிறார். பிரதமர் அவ்வாறு பேசியிருக்க வேண்டாம். தமிழக மக்கள் வேறு இடங்களிலிருந்து கொள்ளையடித்து வரவேண்டும் என்பதில்லை. தமிழகத்தில் உள்ள தொழில்கள் மற்றும் முதலீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டுத்தான் குஜராத்துக்குச் சென்றிருக்கிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். தற்போது பருப்பு இறக்குமதி செய்யும் வாய்ப்பை தூத்துக்குடி துறைமுகத்துக்கு மறுக்கப்பட்டு குஜராத் மாநிலம் அதானி துறைமுகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில் வளம் தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தொழிற்சாலைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு குஜராத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 22 முதலாளிகளுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் கிடையாது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு கூட ஒரு ரூபாய் கூட கடன் தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கடன் தள்ளுபடி செய்து பயன்பெற்ற 22 பேரும் குஜராத்தை சேர்ந்தவர்கள். தமிழக மக்கள் கொள்ளை அடிப்பவர்கள் அல்ல. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதை பிரதமர் தவிர்க்க வேண்டும்” என்றார்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அழைப்பிதழ் வழங்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவராக அவருக்கு குல்லா அணிவித்து, அவரது துணைவியாருக்கு பர்தா அணிவிப்பதை ஏற்றுக் கொள்வார் என்றால் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதை ஏற்றுக் கொள்ளுகிறோம். அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இதை செய்யக்கூடாது”,என்றார்.

மேலும், “அரசுப் பேருந்தில் பயணம் செய்த காவலர் டிக்கெட் எடுக்காமல் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், டிக்கெட் எடுக்க மாட்டேன், நானும் அரசு ஊழியர் என்று காவலர் சொல்லியிருக்கிறார். அவரின் பேச்சு சரியானது அல்ல; நல்லதல்ல.

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சந்தேகம் மரணம் பற்றிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்க, காவல்துறை யாரை வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் என்றாலும், சம்மன் செய்து குற்றம் தொடர்பாக விசாரித்தால் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுதான் கடமை. இந்த வழக்கில் எனக்கு சம்மன் வந்தால், நானும் சென்று பதில் அளிப்பேன். குற்றவாளிகளுக்கு இந்த அரசு துணை போனது இல்லை. அது எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கக்கூடிய முதல்வர் இங்கு இருக்கிறார்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in