“பிரதமர் பேச்சை திரித்து திசை திருப்பும் ஸ்டாலின் முயற்சி வெற்றி பெறாது” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை: ஒடிசாவில் பிரதமர் மோடி பேசியதை திரித்து திசை திருப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி வெற்றி பெறாது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதை திரித்து வழக்கம் போல வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிரதமர் மோடி ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் ஒரு மணி நேரம் பேசுகிறார். அதில் 50 நிமிடங்களுக்கு மேலாக, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகள், எந்த மாநிலத்தில், எந்த தொகுதியில் பேசுகிறாரோ அந்த மாநிலத்துக்கு, அந்த தொகுதிக்கு செய்த சாதனைகள் பற்றி பேசுகிறார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளின் சதித் திட்டங்கள், பிரிவினைவாத செயல்திட்டங்களை அம்பலப்படுத்த சில நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார்.

ஆனால், பிரிவினைவாத சித்தாந்தத்தில் பிறந்து வடக்கு - தெற்கு, ஆரிய - திராவிட இனவாதம் பேசும் திமுகவுக்கு, எல்லாவற்றையும் விட நாட்டின் ஒற்றுமையை முக்கியமாக கருதும் பிரதமர் மோடியை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை.

திராவிடம்', 'திராவிட மாடல்' என்று கூறி 'தமிழ்', 'தமிழர்' அடையாளத்தை அழித்து வருவது திமுக தான். இந்துமத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக்கூட மனமில்லாத அளவுக்கு இந்து மதத்தின் மீது வெறுப்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமரை நோக்கி வெறுப்புப் பேச்சு பேசுகிறார் என்று விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை.

இந்தி மொழி பேசும் மாநிலங்களை 'கோமூத்ர மாநிலங்கள்' என்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி.செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஸ்டாலின், மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று அறிக்கை விட்டுள்ளார். இந்த வரிகளை அவர் தனக்குத்தானே சொல்லிக் கொள்ள வேண்டும்.

தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், ஐ.நா சபை போன்ற உலகளாவிய மன்றங்களிலும் தமிழ், தமிழகம், தமிழர் பெருமைகளை பிரதமர் மோடி பேசி வருகிறார். உலகின் தொன்மையான மொழி தமிழ் என உலக அரங்குகளில் பேசியவர் பிரதமர் மோடி மட்டுமே. தமிழக மக்களுக்கு எதிராகப் பேசி விட்டார் என்று சொல்வதை மக்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்.

ராகுல் காந்தியின் ஆசான் சாம் பிட்ரோடா தமிழகத்தை, தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியபோது மவுனமாக இருந்த முதல்வர் ஒடிசாவில் பிரதமர் மோடி பேசியதை திரித்து திசை திருப்ப முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது. முதல்வரின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in