Last Updated : 24 May, 2024 03:10 PM

 

Published : 24 May 2024 03:10 PM
Last Updated : 24 May 2024 03:10 PM

“திருவள்ளுவருக்கு காவி உடை... ஆளுநரை என்னதான் செய்ய முடியும்?” -  சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: “குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக்கொண்டே தான் இருக்கும். அதேபோல, நமது கெட்ட நேரம். இதுபோன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மே 24) நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது: “குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும். அதேபோல, நமது கெட்ட நேரம். இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கெனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும்? வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்துக்கு மருந்தில்லை.

இண்டியா கூட்டணியானது இந்த முறை 300 இடங்களில் இருந்து 370 வரை கைப்பற்றி, மத்தியில் ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. நான் கை நீட்டுபவர்தான் அடுத்த பிரதமர் என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறுகிறார் என்றால், முதலில் அவர் எந்தப் பக்கம் நீட்டுவார் என்று கூற வேண்டும். கேரளாவில் அணை கட்டும் விவகாரம் குறித்து தமிழக முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

போதைப் பொருள் புழக்கத்தை எந்த அளவுக்கு தடுத்து இருக்கிறோம் என்பதை, நாங்கள் (தமிழக அரசு) எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம். ஒடிசாவுக்கு செல்லும்போது தமிழர்களை திருடர்கள் என்று பேசுவதும், தமிழகத்துக்கு வந்தால் புகழ்வதுமான இரட்டை நிலைப்பாட்டை பாஜகவின் மூத்த தலைவர்கள் பின்பற்றுகின்றனர். நாங்கள் என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டார்கள். ராகுல் காந்தியை பாராட்டி சமூக வலைதளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டி பதிவிடப்பட்டு இருந்ததை, அவருக்கு கிடைத்த பாராட்டு மழையினால் அவர் நீக்கி இருக்கலாம்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x