Last Updated : 24 May, 2024 02:58 PM

 

Published : 24 May 2024 02:58 PM
Last Updated : 24 May 2024 02:58 PM

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது: பண்ணை வீட்டில் அத்துமீறியதாக நடவடிக்கை

ராஜேஷ்தாஸ் | கோப்புப்படம்

திருப்போரூர்: ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசனுக்குச் சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக, முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் அருகே தையூரில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் தங்குவது வழக்கம். இந்த வீடு மற்றும் நிலம் ஆகியவை ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன் பெயரில் வாங்கப்பட்டு உள்ளது. மேலும், இருவரது பெயரிலும் வீட்டின் மீது வங்கிக் கடனும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.

ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வந்தார். இதனால், கடந்த 3 மாதங்களாக தையூர் பண்ணை வீட்டுக்கு அவர் செல்லவில்லை. மேலும், வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி நர் பகதூர், தையூரைச் சேர்ந்த தோட்ட பராமரிப் பாளர் மேகலா ஆகியோர் மட்டும் பணியில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், பாலியல் வழக்கில் சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் விலக்கு பெற்றார்.

இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி தையூர் பண்ணை வீட்டுக்கு வந்த ராஜேஷ் தாஸ் வீட்டுக்குள் நுழைய முயன்றிருக்கிறார். ஆனால், காவலாளி நர் பகதூர், கேட்டை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு, பீலா வெங்கடேசன் வீட்டுக்குள் யாரையும் விட வேண்டாம் எனச் சொல்லி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, தனக்கு ஆதரவான ஆட்களை வரவழைத்த ராஜேஷ் தாஸ், காவலாளியை தாக்கிவிட்டு பண்ணை வீட்டில் அத்துமீறி தங்கியதாக தெரிகிறது. மேலும், அவருக்கு பாதுகாப்பாக 10-க்கும் மேற்பட்ட அடியாட்களும் அந்த வீட்டில் தங்கியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு பீலா வெங்கடேசன் அனுப்பிய புகாரில், தனது முன்னாள் கணவர் ராஜேஷ் தாஸ், அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்குச் சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்துவிட்டு உள்ளே தங்கி இருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக கேளம்பாக்கம் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், மேற்கண்ட வழக்கின் பேரில் ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x