Published : 18 Apr 2018 07:54 AM
Last Updated : 18 Apr 2018 07:54 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு- மே 6-ம் தேதி நாடு முழுவதும் 150 நகரங்களில் நடக்கிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (அனுமதி சீட்டு) இணையதளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவருக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்கள், திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் என சுமார் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை சிபிஎஸ்இ நேற்று www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அளித்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடுமுழுவதும் 150 நகரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிட்டிருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x