Published : 14 May 2024 07:09 PM
Last Updated : 14 May 2024 07:09 PM

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு விரைவில் சுற்றுச்சூழல் அனுமதி: நிபந்தனைகள் என்னென்ன?

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இக்குழு கட்டுமானப்பணியில் 'எய்ம்ஸ்' நிர்வாகத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் 'எய்ம்ஸ்' மருத்துவமனை ரூ.1,977.8 கோடி மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டப்படுகிறது. 82 சதவீதம் நிதி தொகையான ரூ.1627.70 கோடியை ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக வழங்குகிறது. மீதி 18 சதவீதம் தொகையை மத்திய அரசு நேரடியாக இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு வழங்குகிறது.

மதுரையுடன் நாடு முழுவதும் அறிவித்த பிற 'எய்ம்ஸ்' கட்டுமானப்பணிகள் முடிந்து பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், மதுரை தோப்பூர் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டநிலையில் கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை.

இந்தச் சூழலில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி கட்டுமானப் பணிக்கான டெண்டர் அறிவிப்பை 'எய்ம்ஸ்' நிர்வாகம் வெளியிட்டது. இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி நிறுவனம் (L&T Construction), எய்ம்ஸ் கட்டுமானப்பணியை டெண்டர் எடுத்தது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம், மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை சத்தமில்லாமல் நடத்தியது.

ஆனால், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாததால் தற்போது வரை கட்டுமானப்பணிகளை உடனடியாக தொடங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. அதனால், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் கடந்த மே 2-ம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்தது. இந்நிலையில், கடந்த மே 10 அன்று இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதனால், இன்னும் சில நாட்களில் தமிழக அரசு இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைப்பதற்கும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும்; மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்; தரமான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும்; மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்; எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்; கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதற்காகன கட்டமைப்பு அமைக்க வேண்டும்; ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்த கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

'எய்ம்ஸ்' கிராமங்களுக்கு ரூ.10 கோடி நிதி: எய்ம்ஸ் நிர்வாகம், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள், அதில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி தருவதற்காக ரூ.10 கோடி ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிவகாசி, விருதுநகர் வெடி விபத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு 'எய்ம்ஸ்' நிர்வாகத்துக்கு நிபந்தனை விதித்துள்ளதால், பிரதான தீக்காய சிகிச்சை பிரிவும் 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அமைய வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x