காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையை ஆக.15-ல் திறக்க அரசுக்கு வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை

தஞ்சாவூரில் இன்று நிகழாண்டு சாகுபடி தொடர்பாக அரசுக்கான பரிந்துரைகள் குறித்து கையேடுகளை வெளியிட்ட மூத்த வேளாண் வல்லுநர்கள் குழுவினர் | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூரில் இன்று நிகழாண்டு சாகுபடி தொடர்பாக அரசுக்கான பரிந்துரைகள் குறித்து கையேடுகளை வெளியிட்ட மூத்த வேளாண் வல்லுநர்கள் குழுவினர் | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
2 min read

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், டெல்டா மாவட்ட பாசனத்துக்காக அணையை ஆகஸ்ட் 15-ம் தேதி திறக்கலாம் என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளனர்.

மேட்டூர் அணை பாசன பகுதிக்கான பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும் குறித்து ஆண்டுதோறும் அரசுக்கு தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பி.கலைவாணன் தலைமையிலான குழுவினர் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கி வருகின்றனர். அதன்படி நிகழாண்டு 19-வது ஆண்டாக தமிழக அரசுக்கு வழங்கிய பரிந்துரை குறித்து தஞ்சாவூரில் இன்று (மே 14) அக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் முதல் ஜனவரி வரை 167.25 டிஎம்சி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும். இத்துடன் ஆரம்ப இருப்பையும் சேர்த்தால் 182 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

தமிழகத்தில் 7.40 லட்சம் ஹெக்டர் நெல் சாகுபடியை நாற்று விட்டு நடவு செய்தால் 300 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் தேவை இருக்கும். இந்த ஆண்டில் இதை நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. இருப்பினும் குறுவை, சம்பா பருவ காலங்களில் 50 சதவீத பரப்பளவில் நேரடி விதைப்பு செய்து மற்ற பகுதியில் ஆற்று நீர், மழை நீரை பயன்படுத்தினால் சுமார் 230 டிஎம்சி நீர் தேவைப்படும். இதற்கு ஜூன் மாதம் ஆரம்ப காலத்தில் குறைந்தது 68டிஎம்பியாவது இருக்க வேண்டும்.

எனவே இருபோக சாகுபடிக்கு பதிலாக ஒருபோக சாகுபடியாக செயல்படுத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடர் மழை இருக்கும் என்ற பட்சத்தில் சாகுபடி செய்தால் நெற்பயிர்கள் பூக்கும் தருணத்தில் பாதிப்பு ஏற்படும். மேலும் நீண்டகால நெல் ரகங்களை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் முதல் வாரத்துக்குள் விதைக்கப்பட வேண்டும். மத்திய கால ரகங்களை செப்டம்பர் மாதம் முழுவதும் விதைக்கலாம்.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எவ்வித சாகுபடியும் செய்யக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் ஒருபோக சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15ஆம் தேதி அரசு திறக்க வேண்டும். எனவே, அணைத் திறப்பதற்கு முன்பாக அனைத்து ஆறுகள், வாய்க்கால்கள், நீர்நிலைகளை தூர்வாரி தயார் நிலையில் அரசு வைக்க வேண்டும். சம்பா பருவத்தில் நீரின் தேவையை குறைத்திட அதிக பரப்பளவில் நேரடி விதைப்பு செய்திட விவசாயிகளுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும்.

மேட்டூர் அணை 90 ஆண்டுகளில் தேங்கிக்கிடக்கும் மணல் மற்றும் கற்களால், அதன் நீர் கொள்ளளவு மிகவும் குறைந்துவிட்டது. எனவே அணையில் தேங்கியிருக்கும் சகதிகளையும், மணல்களையும் அகற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர். இதில் ஓய்வு பெற்ற வேளாண்மை மூத்த வல்லுநர்கள் பி.கலைவாணன், வி.பழனியப்பன், வி.கலியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in