Published : 08 Apr 2018 09:00 AM
Last Updated : 08 Apr 2018 09:00 AM

தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவதாக தகவல்: பெண்களுக்கு அதிக சட்ட விழிப்புணர்வு தேவை- உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், பெண்கள் மத்தியில் இன்னும் அதிக சட்ட விழிப்புணர்வு அவசியம் என்கின்றனர் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முந்தைய ஆண்டைவிட 2016-ல் அதிகரித்துள்ளது என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பக சர்வே. இந்திய அளவில் 2014-ல் 3.39 லட்சம் குற்ற சம்பவங்கள் (56.6 சதவீதம்) நடந்துள்ளன. 2015-ல் இது 3.29 லட்சமாக (54.2 சதவீதம்) குறைந்தது. 2016-ல் இது மீண்டும் 3.38 லட்சமாக (55.2 சதவீதம்) அதிகரித்துள்ளது.

2016-ல் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக 1.10 லட்சம் வழக்குகளும், மானபங்கத்துக்காக 84,746 வழக்குகளும், கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் தொடர்பாக 64,519 வழக்குகளும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக 38,947 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை, பெண்களுக்கு எதிராக 2014-ல் 6,354 குற்ற சம்பவங்கள், 2015-ல் 5,919 குற்ற சம்பவங்கள், 2016-ல் 4,463 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இதில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் முதல் 5 இடத்தில் உள்ளன. தமிழகம் குற்ற சம்பவங்களின் அடிப்படையில் 13-வது இடத்திலும், குற்ற சதவீதத்தின் அடிப்படையில் 34-வது இடத்திலும் உள்ளது.

குறையும் குற்ற சம்பவங்கள்

2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளில் தமிழகத்தில் இத்தகைய வழக்குகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் இந்த 3 ஆண்டுகளில் 471 - 450 - 336 என்று படிப்படியாக குறைந்துள்ளது. அதேபோல, வரதட்சணை மரணம் தொடர்பான வழக்குகள் 95 - 65 - 58 என்றும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கொடுமைக்கு ஆளாவது தொடர்பான வழக்குகள் 2,103 - 1,900 - 854 என்றும் குறைந்துள்ளது. மானபங்கம் தொடர்பாக 2014-ல் 1,102 வழக்குகள் பதிவாகின. 2015-ல் இது 1,163 என அதிகரித்தாலும், 2016-ல் 854 ஆக குறைந்துள்ளது. ஆக ஒவ் வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் குறைந்து வருகிறது.

இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் கூறியதாவது:

உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர், வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி: 2014-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக் காக பதிவு செய்யப்பட்ட 3,771 வழக்குகளில், 2,752 வழக்குகளில் மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015-ல் பதிவு செய்யப்பட்ட 3,578 வழக்குகளில் 2,612 வழக்குகளிலும், 2016-ல் பதிவு செய்யப்பட்ட 2,504 வழக்குகளில் 1,522 வழக்குகளிலும் மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய வழக்குகள் கண்டுபிடிக்க முடியாதவை, தள்ளுபடி செய்யப்பட்டவை என முடித்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளி யில் தெரியும் குற்றம், வெளியே தெரியாத குற்றம் என 2 வகைப்படுத்தலாம். பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தைரியமாக வெளியில் சொல்வது இல்லை. அது குற்றவாளிகளுக்கு சாதகமாகி விடுகிறது. ஆனால், தமிழகத்தில் நிலைமை மெல்ல மாறி வருகிறது. தற்போது பெண்கள் புகார் கொடுக்க துணிச்சலாக முன்வருகின்றனர்.

சரிகா ஷா, நிர்பயா, சிறுமி ஹாசினி, உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்குகளின் விரைவான தீர்ப்புகள், பெண் கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆனாலும்கூட, பள்ளி, கல்லூரிகளிலும், பணிபுரியும் இடங்களிலும், குடும்பங்களிலும் பெண்களுக்கு இன்னும் அதிக சட்ட விழிப்புணர்வு தேவை. அதை எங்கள் மேனேஜ்மென்ட் லேபர் அகாடமி மூலம் செய்து வருகிறோம்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.சுதா: இப்போதெல்லாம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்ட பிரத்யேகமாக தனி அறை உருவாக்கப்பட்டுவிட்டது. இதனால் பின்விளைவுகள் பற்றி பெண்கள் பயப்படத் தேவையில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவது பாராட்டுக்குரியது. அதேநேரம், வெளியே தெரியாத குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைய வேண்டும்.

பாலியல் கல்வியை போதிக்க தனியாக மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இதற்கேற்ப மகளிர் நீதிமன்றங்கள் இல்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மகளிர் நீதிமன்றத்தை தொடங்கினால் வழக்குகளின் தேக்கம் குறைவதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x