Last Updated : 13 May, 2024 04:55 PM

 

Published : 13 May 2024 04:55 PM
Last Updated : 13 May 2024 04:55 PM

மத்திய அரசு உத்தரவால் புதுவையில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

புதுச்சேரியில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுப்பும் பணி தொடங்கியது

புதுச்சேரி: மத்திய அரசு உத்தரவால் புதுச்சேரியில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுப்பும் பணி தொடங்கியது. இணையதள பக்கத்தைப் புதுப்பித்து விரைவில் இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு மீன்வளத் துறை அறிக்கையாக தரவுள்ளது.

மத்திய அரசின் மீன்வள அமைச்சகம் அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தற்போது உள்ள மீன்பிடி தடை காலத்தில் அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் உப்பளம் துறைமுகத்திலுள்ள மீன்பிடி விசைப்படகுகளை புதுச்சேரி மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கங்கள் ஒத்துழைப்புடன் கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதற்காக மீன்வளத்துறை துணை இயக்குனர் (எந்திரப்பிரிவு) ராஜேந்திரன் மேற்பார்வையிலான குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுட்டனர். கள ஆய்வில் சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களிடம் படகு சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள், பதிவு சான்றிதழ், மீன்பிடி உரிமம், டீசல் புத்தகம், காப்பீடு ஆவணம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், விசைபடகில் பொருத்தப்பட்டுள்ள எந்திரம், ஜிபிஎஸ், விபிஎச் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். இவைகளில் மாற்றம் இருந்தால் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க அறிவுருத்தினர்.

படகின் நீள அளவுகளில் அதிகபட்ச மாறுதல்கள் இருப்பின் அதற்குரிய விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யவும் கேட்டு கொண்டனர். இது தொடர்பாக மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் கூறுகையில், “மத்திய அரசு உத்தரவுப்படி மீன்பிடி விசைப் படகுகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் இதற்கான இணையத்தளப் பக்கத்தை புதுப்பித்து அதில் விவரங்களை மத்திய அரசுக்கு அறிவிக்கையாக தருவோம்.

பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் கள ஆய்வில் காண்பிக்கப்படாத பட்சத்தில், அந்த படகுகள் மீது தனியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அந்த படகு பதிவு தொடரப்படும் அல்லது நீக்கம் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x