Published : 04 Apr 2018 08:50 AM
Last Updated : 04 Apr 2018 08:50 AM

காவிரி விவகாரத்தில் உணர்வு இருந்தால் எம்பிக்கள் ராஜினாமா செய்யட்டும்: தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்

‘காவிரி விவகாரத்தில் அவ்வளவு உணர்வு இருந்தால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்யுங்கள்’ என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காவிரி உரிமைக்காக போராடவில்லை. பாஜகவை எதிர்ப்பதற்காக போராடுகிறார்கள். அவர்களால் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட காவிரி உரிமை, தமிழகத்துக்கு சில வாரங்களுக்குள் பெற்றுக் கொடுக்கப்படும்.

இதில் தீர்வு ஏற்படாததற்கு கர்நாடகமே காரணம். தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் வேளையில், மேகேதாட்டுவில் அணைகட்ட நிதி ஒதுக்கியிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இதற்கு ஸ்டாலின், திருநாவுக்கரசர் பதில் என்ன? மேலாண்மை வாரியம் என அறிவித்துவிட்டால், அணைகளின் உரிமைகளை அந்த ஆணையத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்குமா? மீண்டும் மறுசீராய்வுக்குச் செல்வார்கள்; திட்டம் கிடப்பில் போடப்படும்.

சட்ட விதிகளுக்கு உட்பட்டே தீர்வு காண முடியும். காவிரி நீர் நிச்சயம் வரும். தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தரும் வரை எங்கள் பணி முடியாது. நீதிமன்றம் கூறாத ஒன்றை அமைக்க வேண்டும் எனக்கூறி பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள்.

தமிழக அரசை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் ஒரு எம்பி ராஜினாமா செய்வதைக்கூட விட்டுக் கொடுக்க மனம் இல்லை. உங்களுக்கு அவ்வளவு உணர்வு இருந்தால் எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்யுங்கள். எங்களுக்கு உணர்வு இருக்கிறது. விமர்சனங்கள் குத்திக் கிழித்தாலும் பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x