Published : 12 May 2024 04:49 AM
Last Updated : 12 May 2024 04:49 AM

பள்ளி குழந்தைகளிடம் அதிகரிக்கும் கிட்டப்பார்வை குறைபாடு

பள்ளிக் குழந்தைகளுக்கு நடைபெறும் கண் பரிசோதனை. (கோப்பு படம்)

மதுரை: பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணிவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்புக்கு என்ன காரணம், கண்ணாடி அணிந்தவுடன் பிரச்சினை சரியாகி விடுகிறதா, கிட்டப்பார்வை வராமல் தடுக்க வாய்ப்பிருக்கிறதா என்ற பல கேள்விகள் பெற்றோரிடம் எழுகின்றன.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும்மே 13 முதல் 19 வரை உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம் (World Myopia Awareness Week)கடைப்பிடிக்கப்படுகிறது. பார்வைக் குறைபாடு அதிகரிப்புக்கு கல்வியும், சூழலும்தான் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுகுறித்து தேசிய கண் மருத்துவ சங்க முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், கண் மருத்துவ உதவியாளருமான மு.வீராசாமி கூறியதாவது: அதிக வீட்டுப் பாடம், தனிப்பயிற்சி வகுப்பு, ஓவியம், இசைசிறப்புப் பயிற்சி என மாணவர்களுக்கு பல்வேறு விஷயங்கள் காத்திருக்கின்றன. இரவு 9மணிக்கு மேல் வீடு திரும்பியவுடன், அடுத்த நாளுக்கான வீட்டுப்பாடம், தேர்வுக்குரிய பாடங்களைப் படித்துவிட்டு தூங்கப் போவதற்கு இரவு 11 அல்லது 12 மணியாகி விடுகிறது.

இதனால் கண்களுக்கு அருகில் வேலை பார்க்கும் நேரம்(near worktime) அதிகமாகிறது. தூக்கத்துக்கும், கிட்டப் பார்வைக்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இரவில் நீண்ட நேரம் கழித்து தூங்குவதும், குறைவான நேரம்தூங்கி எழுவதும்கூட கிட்டப்பார்வைக்கு வழி வகுக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.

போதுமான தூக்கம் முக்கியம்: தூக்கம் பாதிக்கப்படும்போது நம் உடலின் சர்க்காடியன் இசைவு(circadian rhythm) பாதிக்கப்படுகிறது. இதனால் விழித்திரை பாதிக்கப்படுகிறது. இதனால் பிள்ளைகளை முடிந்தஅளவு இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் விரைவாக எழச் செய்யலாம்.

குழந்தைகள் வளரும்போது விழிக்கோளம் நீட்சி (eyeball elongation) அடைவதால் கிட்டப்பார்வை ஏற்படுகிறது. இதனால்நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பம் கண்ணின் விழித்திரையில் விழாமல், விழித்திரைக்கு சற்று முன்னதாகவே விழுகிறது. இதனால் பார்வை தெளிவில்லாமல் போகிறது.

சூரிய ஒளி அவசியம்: குழந்தைக்கு ஏற்படும் கிட்டப்பார்வை, குழந்தையின் கல்வியை வெகுவாகப் பாதித்துவிடும். ஆகையால் இதைபெற்றோர் உடனே கவனித்து,சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அறிவுசார் குறைபாட்டுக்கும் வழிவகுத்துவிடும். கிட்டப்பார்வையைத் தடுக்கநேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டுக்கு வெளியே பிள்ளைகளை விளையாடச் செய்யுங்கள். குறிப்பாக, சூரியஒளி படும் இடத்தில் உட்கார்ந்து படிக்கலாம்.

ஏற்கெனவே, கண்ணாடி அணிந்திருப்பவர்களும் இதைக் கடைப்பிடிப்பது நல்லது. செல்போனில் படிக்கவேண்டியிருந்தால், டேப்லட்பிஸி-க்கு மாற்றி படிக்கலாம். மடிக்கணினி, மேஜை கணினிஇன்னும் நல்லது. வீட்டில் பிள்ளைகள் நல்ல வெளிச்சத்தில் படிக்க வேண்டும். டியூப் லைட் நல்லது. எல்இடி விளக்குகள் வேண்டாம். வீட்டில் படிக்கும் அறை, வெள்ளைவண்ணம் அல்லது இள நிறத்தில் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

சீன முறையில்...: கரோனாவுக்கு பிறகு பள்ளிக் குழந்தைகளை செல்போன்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கி விட்டன. எந்நேரமும் செல்போனில் மூழ்கி கிடப்பது, கிட்டப்பார்வைக்கு வழிவகுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெளிப்புறச் சூழலில் இருக்கும்போது சூரிய ஒளிமூலம் டோபமைன் ஹார்மோன்சுரக்கிறது. இதன் மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். தொடக்கப் பள்ளி மாணவர்களை காலை நேரத்தில் வகுப்பறைக்கு வெளியே 45 நிமிடம் இருக்க வைத்து, கற்பிப்பது நல்லபலனைத் தரும். சீனா, தைவான் போன்ற நாடுகளில் இதுபோன்ற முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x