Published : 02 Apr 2018 07:51 AM
Last Updated : 02 Apr 2018 07:51 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் முயற்சி: ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட முயன்ற மு.க.ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கானோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் அண்ணா அறிவாலயத் தில் நேற்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதற்கிடையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த உடன் மதியம் 12.30 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.க தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் வள்ளுவர் கோட்டம் விரைந்தனர். அவர்களும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட அரசியல் கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னோக்கி சென்றனர். அங்கு தயாராக நின்றிருந்த போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தி 100 பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் பேரை கைது செய்தனர். மறியலால் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில், வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கடையடைப்புப் போராட்டம் நடத்துவதென முடிவெடுத்து இருக்கிறோம். அதுமட்டுமல்ல, போக்குவரத்தும் நிறுத்தப்படும். அதேபோல, ரயில் நிறுத்தப் போராட்டமும் நடைபெறவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம். விரைவில், மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று, அதற்கான தேதி உள்ளிட்ட பிற விவரங்கள் முடிவெடுக்கப்படும்.

அந்தப் பேரணியை தொடர்ந்து, பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்ற நாளில், அனைத்து கட்சிகளின் சார்பில் அவருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம். அதேபோல, மத்திய அமைச்சர்கள் யார் தமிழ்நாட்டுக்கு வந்தாலும், கறுப்பு கொடி காட்டி நம்முடைய எதிர்ப்பை தெரியப்படுத்துவோம்.

இப்படி, பலகட்டங்களாக போராட முடிவெடுத்திருக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாட்டில் இத்தகைய போராட்டங்கள் தொடரும். இன்று கைது செய்து விடுவித்தாலும், நாளையும் நமது போராட்டம் நிச்சயம் தொடரும்.நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டம் எங்கு, எப்போது, எப்படி நடைபெறும் என்பதை இப்போது வெளியிட மாட்டோம். அது நாளைய தினம் தானாக தெரியவரும். மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தொடர்ந்து, அனைத்து கட்சிகளின் சார்பில் இப்படிப்பட்ட போராட்டங்களை திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x