Published : 25 Apr 2018 12:05 PM
Last Updated : 25 Apr 2018 12:05 PM

கோயம்பேடு சந்தையில் அதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா?- அன்புமணி கண்டனம்

சென்னை கோயம்பேடு சந்தையில் அதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை தமிழக அரசு இடமாற்றம் செய்வதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தின் சந்தை மேலாண்மைக் குழு முதன்மை நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் அப்பதவியில் அமர்த்தப்பட்ட சில மாதங்களில் காரணமே இல்லாமல் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை காரணமின்றி பழிவாங்குவது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான் நிர்வகித்து வருகிறது. இதற்காக பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சந்தை மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரியாக மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரி ஒருவர் இருப்பார். ஊழல் மூலம் பணம் கொழிக்கும் பதவி என்பதால் இப்பதவிக்கு கடுமையான போட்டி நிலவுவது வழக்கம்.

இந்தப் பதவிக்கு வருபவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அனைத்து வகையான சட்டவிரோத செயல்களையும் அனுமதிப்பது வழக்கம். இதனால் சென்னை கோயம்பேடு வணிக வளாகம் இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்கள் அரங்கேறும் மர்ம உலகமாக மாறிவிடுவது வழக்கம்.

கோயம்பேடு வணிக வளாகத்தின் சந்தை மேலாண்மைக் குழு முதன்மை நிர்வாக அதிகாரியாக கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜேந்திரன் என்ற நேர்மையான அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு கோயம்பேடு சந்தை புதுப்பொலிவுப் பெறத் தொடங்கியது. கோயம்பேடு வணிக வளாகத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நாள்தோறும் சந்தை வளாகத்தில் வலம் வந்த ராஜேந்திரன், வணிகர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றினார்.

கடைகளை உள்வாடகைக்கு விடுதல், கந்து வட்டிக்கு பணம் கொடுத்தல், செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடை செய்தார். அதேநேரத்தில் வணிகர்களின் நலனுக்காக சட்டப்பூர்வமாக பல்வேறு உதவிகளை செய்யும் நோக்கத்துடன் புதிய திட்டங்களை அதிகாரி ராஜேந்திரன் செயல்படுத்தினார்.

வணிக வளாகத்தில் மாலை நேரத்தில் கஞ்சா வணிகம், சட்டவிரோத மது விற்பனை ஆகியவையும், அவற்றைத் தாண்டிய சில செயல்களும் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறை ஒத்துழைப்புடன் அவற்றுக்கு முடிவு கட்டினார். துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு கோயம்பேடு வணிக வளாகத்தை தூய்மையானதாக மாற்றினார். அவரது செயல்களுக்கு வணிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

ஆனால், ராஜேந்திரனின் அதிரடியாக செயல்பாடுகளால் ஆளுங்கட்சியின் ஆதரவுடன் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களின் வருமானம் முற்றிலுமாக தடைபட்டது. தமிழக துணை முதல்வரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆளுங்கட்சியினர் முறையிட்டதன் அடிப்படையில், சந்தை மேலாண்மைக் குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து ராஜேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, அதே குழுவின் அலுவலகத்தில் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த இடமாற்றத்தை ரத்து செய்யும்படி வணிகர்கள் மனு கொடுத்ததைத் தொடர்ந்து அவர் முதன்மை நிர்வாக அதிகாரி பதவியையும் கூடுதலாக கவனித்துக் கொள்ளும்படி பணிக்கப்பட்டிருக்கிறார். எனினும், இடமாற்றம் ரத்து செய்யப்படாததால் எந்த நேரமும் அவர் விடுவிக்கப்படக்கூடும்.

கோயம்பேடு சந்தை வளாகம் சுகாதாரமின்றியும், அடிப்படை வசதிகளின்றியும் காணப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சந்தை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆணையிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் ஆணை நிறைவேற்றப்படவில்லை. கோயம்பேடு சந்தை வளாகம் தூய்மையின்றி அசுத்தக்காடாகவே காட்சியளித்தது.

முதன்மை நிர்வாக அதிகாரியாக ராஜேந்திரன் பொறுப்பேற்ற பிறகு தான் கோயம்பேடு சந்தை வளாகம் தூய்மையாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அதை பொறுக்க முடியாமல் நேர்மையான அதிகாரியை முக்கியத்துவம் இல்லாத இடத்திற்கு இடமாற்றம் செய்வதை சகிக்க முடியாது.

தமிழக அரசு நிர்வாகத்தில் நேர்மையான அதிகாரிகள் குறைந்து வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையில் உள்ள அதிகாரிகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒதுக்கி வைப்பது நல்ல நிர்வாகத்திற்கு அடையாளம் அல்ல. எனவே, அதிகாரி ராஜேந்திரனின் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, கோயம்பேடு சந்தை மேலாண்மைக் குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரியாக அவரை முழுநேரமாக நியமிக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x