Published : 09 May 2024 05:29 PM
Last Updated : 09 May 2024 05:29 PM

தேர்தல் ஆணைய அனுமதி பெற்று 8 பேர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் @ பட்டாசு ஆலை விபத்து

சென்னை: சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (மே 9) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x