Published : 09 May 2024 05:30 AM
Last Updated : 09 May 2024 05:30 AM

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கு தமிழக உயர்நிலை ஆணையம் ஒப்புதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கோயம்பேடுக்கு மாற்றாக, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.

இந்த சூழலில், தென் சென்னை மக்களின் பொது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது.

இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமிநகர், திருவிக நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 12 மெட்ரோ நிலையங்களை உயர்மட்ட பாதையில் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கைதயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு கடந்த 2021 நவம்பர் 26-ம் தேதி அனுப்பப்பட்டது. இதன்பிறகு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை2022 செப்டம்பர் 22-ம் தேதி அனுப்பப்பட்டது.

இந்த புதிய மதிப்பீட்டின்படி திட்டசெலவு ரூ.4,625 கோடியாக உயர்ந்தது. திட்ட அறிக்கை அனுப்பி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது.

தமிழக அரசு ஒப்புதல்: இந்நிலையில், இத்திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் தொடர்பாக சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் சில கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கு தமிழக அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக நிதித் துறைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக நிதி அமைச்சர் மற்றும் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்புக்கு அனுப்பப்படும் என்று இதன்மூலம் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x