

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கி.மீ. தூரத்துக்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அவ்வழியாக வந்து சென்ற வாகனங்கள் மற்றும் செல்போன் அழைப்புகளின் விவரங்களை சேகரித்தும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து 8 தனிப்படைகளை அமைத்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 15 தினங்களுக்குள் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜெயக்குமார் இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கி.மீ. தூரத்துக்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். ஜெயக்குமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன் வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்களை சேகரித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், ஜெயக்குமார் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட தேதி மற்றும் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட தேதிக்கும் இடையே கரைசுத்துப்புதூர் வந்து சென்ற வாகனங்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மொபைல் எண்களின் அழைப்பு விவரங்களை சேகரித்தும் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும், ஜெயக்குமாரின் சகோதரர் செல்வராஜிடம் தனிப்படை போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக ஜெயக்குமார் மரண வாக்குமூலம் என்று எழுதியிருந்த கடிதத்தில், 36 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், காவல் துறையினர் ஜெயக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், ஜெயக்குமாரின் சகோதரர் செல்வராஜிடம் தனிப்படை போலீஸார், ஜெயக்குமாரின் நடவடிக்கைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல், ஜெயக்குமாரின் மகன்களிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.