Published : 21 Apr 2018 11:04 AM
Last Updated : 21 Apr 2018 11:04 AM

‘‘எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்; நடவடிக்கை எடுக்கப்படும்’’ - தமிழிசை

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த பதிவுக்காக எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “பெண்கள் இன்று பல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் அதிகம் சிறுமைபடுத்தப்படுபவர்கள் பெண்களாகவே இருப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் குறித்து எழுதியது மிகப்பெரும் தவறு. என்னைப் பொறுத்தவரை அது மன்னிக்க முடியாத குற்றம். பெண்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டு பின் மன்னிப்புக் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்தை பதிந்துவிட்டு, அதனை நீக்கிவிட்டாலும் அக்கருத்து பரவிக்கொண்டேதான் இருக்கின்றது.

இனிமேல் இப்படி யாரும் செய்யக்கூடாது என வன்மையாக கண்டித்து பதிவு செய்கிறேன். இத்தகைய செயல்களில் யாரெல்லம் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்ப்பு தெரிவிப்பதில் கூட ஒரு கண்ணியம், நாணயம் இருக்க வேண்டும். பெண்களை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எஸ்.வி.சேகர் தான் பகிர்ந்த கருத்தை அகற்றியிருக்கிறார். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இருப்பினும் அதைமீறி அவருடைய கருத்து யார் மனதையாவது புண்படுத்தப்பட்டிருந்தால், அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றேன்.

பாஜகவில் இருக்கும் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோரின் தனிப்பட்ட கருத்துகளை ஒட்டுமொத்த பாஜகவின் கருத்து என சித்தரித்து தலைமைக்கு எதிராக போராட்டம் நடத்துவது சரியானது அல்ல. நான் பத்திரிகையாளர்களிடம் உள்ளுணர்வுடன் பழகிக்கொண்டிருக்கின்றேன். எனக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏற்பானது அல்ல” என தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x