Published : 14 Apr 2018 07:28 PM
Last Updated : 14 Apr 2018 07:28 PM

போலீஸாரின் துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற பெண்கள்

 போலீஸார் தங்கள் மகன்கள் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாகக் கூறி மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன் தீக்குளிக்க முயன்ற 5 பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டுவிழா முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்கிறது. இதை மேற்பார்வையிட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

அப்போது அங்குவந்த ஐந்து பெண்கள் தங்கள் உடலில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அதைப்பார்த்து திடுக்கிட்ட அமைச்சர் உதயகுமாரும், உடன் வந்த காவலர்களும், அங்கிருந்த பொதுமக்களும் அவர்கள் தீக்குளிப்பதைத் தடுக்க முயன்றனர்.

ஆனாலும் அந்தப் பெண்கள் தீக்குளிக்க முயன்று கீழே தரையில் உருண்டு புரண்டு அழுதனர். அவர்களை உதயகுமார் தேற்றினார். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் விசாரணையில் அவர்கள் அனைவரும் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களது மகன்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், திருந்தி வாழும் அவர்களை போலீஸார் துன்புறுத்துவதாகவும் தெரிவித்தனர்.

கேரளாவிற்கு கூலி வேலைக்குச் சென்றவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்து கொண்டு வந்துள்ளதாகவும், அவர்களைச் சிறையில் அடைத்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டியதாகவும், திருந்தி வாழ்ந்தாலும் போலீஸார் விட மறுக்கிறார்கள் என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது தண்ணீரை ஊற்றிய காவல்துறையினர், 5 பெண்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அமைச்சர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x