Published : 08 Apr 2018 05:00 PM
Last Updated : 08 Apr 2018 05:00 PM

பழனி கோயில் சிலை முறைகேடு வழக்கு; ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு மீண்டும் மாற்றுக: ஆளுநருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடிதம்

பழனி கோயில் சிலை முறைகேடு தொடர்பான வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்

தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சரே கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்தவர் வி.வி.சுவாமிநாதன்.

இதுகுறித்து ஆளுநருக்கு முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் எழுதிய கடிதம் வருமாறு:

“பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு ஸ்தபதி முத்தையாவால் செய்யப்பட்ட உற்சவர் சிலையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட தங்கம் இருந்ததும், அது பஞ்சலோக சிலையே அல்ல எனவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக ஸ்தபதி முத்தையாவும், அப்போதைய பழனி கோயில் இணை ஆணையர் கே. கே. ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டின் விசாரணை சூடு பிடித்திருந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இது சிலை கடத்தல் அல்ல, சிலை செய்ததில் மோசடி என்பதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறையால் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில் பொறுப்பில் இருந்த சில அமைச்சர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனை மறைக்கவே அழுத்தம் கொடுக்கப்பட்டு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் சிலை தொடர்பான வழக்குகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல்தான் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் போது, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை இல்லை.

இந்த முறைகேட்டை மோசடியாக மட்டும் பார்க்காமல், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அவரது சீரிய முயற்சியால் தான் புதிய உற்சவர் சிலை புதிதாக வைக்கப்பட்டது. அந்த முயற்சிகளை வீணடிக்கும் செயலாக இந்த வழக்கு மாற்றம் பார்க்கப்படுகிறது.

எனவே சிபிசிஐடி விசாரணையை ரத்து செய்து ஐஜி பொன் மாணிக்கவேல் இந்த வழக்கை விசாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் விவி சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x