Published : 03 May 2024 10:40 AM
Last Updated : 03 May 2024 10:40 AM

பவானிசாகர் அணை வற்றியதால் 6 ஆண்டுகளுக்கு பின் வெளிப்பட்ட ‘டணாய்க்கன்’ கோட்டை

வெளியில் தெரியும் டணாய்க்கன் கோட்டை

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 3.40 டிஎம்சியாக சரிந்துள்ள நிலையில், நீர்தேக்கத்தில் மறைந்திருந்த டணாய்க்கன் கோட்டை மற்றும் மாதவராயப் பெருமாள் கோயில் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில், பவானியாறும், மாயாறும் கூடும் இடத்தில், பவானிசாகர் அணை (கீழ்பவானி அணை) கட்டும் பணி 1948-ம் ஆண்டு தொடங்கியது. இதனால் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் இருந்த வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம், குய்யனூர் உள்ளிட்ட கிராம மக்கள், பண்ணாரி வனப்பகுதிக்கு குடியேறினர். இக்கிராம மக்கள் வழிபாடு செய்து வந்த மாதவராய பெருமாள், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோயில்கள், டாணாய்க்கான் கோட்டை என்ற பெயரில் அழைக்கப்பட்டன. அணையின் நீர் தேக்க பகுதியில் இருந்த கோயில் சிலைகள், கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் புதிய கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பவானிசாகர் அணை கட்டுமானப் பணி, கடந்த 1955 -ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், அணையில் நீர் தேக்கப்பட்டதால், கற்களால் கட்டப்பட்ட கோயில் மற்றும் மண்டபங்கள் மூழ்கின. தொடர்ந்து நீருக்குள் இருப்பதால், டணாய்க்கன் கோட்டை மற்றும் கோயில் பிரகாரங்கள் சிதலமடைந்தன.

மாதவராயப் பெருமாள் கோயில்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறையும் போது, டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோயில்கள் வெளியே தெரியும். கடந்த 2018 -ம் ஆண்டு நீர்மட்டம் குறைந்த போது, இந்த கோயில்கள் வெளியே தெரிந்தன. அதன் பிறகு 6 ஆண்டுகளாக நீர்மட்டம் குறையாததால், கோயில்கள் தெரியவில்லை. தற்போது நீர்மட்டம் 45 அடியாக சரிந்துள்ளதால், டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில் முழுவதுமாக வெளியே தெரிகிறது. பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அணை மீதும் நீர்த்தேக்க பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை எச்சரிக்கை: இந்நிலையில் மாதவராய பெருமாள் கோயிலுக்கு, சிலர் பரிசல்களில் திருட்டுத்தனமாக சென்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அதை பதிவிட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நீர்வளத் துறை அதிகாரிகள் சார்பில் அந்தப் பகுதியில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் தெரியும் டணாய்க்கன் கோட்டைக்கு பரிசல் மற்றும் எந்திர படகில் பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. அப்பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளது. இதை மீறி சென்றால் பரிசல் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கையும் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் மட்டம் சரிவு: ஈரோடு மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் 105 அடிவரை 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். பருவமழை பொய்த்து போனதாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததாலும், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து, அணையின் நீர் இருப்பு 3.40 டிஎம்சியாக குறைந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததால், கடல் போல் காட்சியளிக்கும் நீர்தேக்கம் தற்போது, குளம் - குட்டை போல் காட்சியளிக்கிறது. அணையின் நீர் இருப்பு குறைந்ததால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.30 அடியாகவும், நீர் இருப்பு 3.40 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 34 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x