Published : 13 Apr 2018 07:40 AM
Last Updated : 13 Apr 2018 07:40 AM

ராமேசுவரத்தில் இன்று நிழல் இல்லாத நாள்

ராமேசுவரம் கடலோரப் பகுதியில் இன்று (13-ம் தேதி) நிழல் இல்லாத நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வருடத்தில் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நமது காலடியில் இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு தெரியாது. இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (zero shadow) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும்போது, நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினை நிழல் இல்லாத நாள் என்று கூறுவர்.

பூமி தனது அச்சில் சுற்றிக் கொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது. மார்ச் மாதம் பூமி யின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருப்பதால் பூமத்திய ரேகை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மார்ச் 20 முதல் நிழல் இல்லாத நாள் தொடங்குகிறது. ஜுன் 21-ல் பூமி தனது அச்சில் அதிகபட்சமாக 23.5 டிகிரி சாய்வதால் கடகரேகைக்கு அருகே இருப்பவர்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடங்குகிறது.

அதன்படி இன்று (ஏப்.13), ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நிழல் இல்லாத நாள் தோன்றுகிறது. சரியாக நண்பகல் 12.13 மணிக்கு சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் போது நிழல் இல்லாத நேரம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு எங்கெங்கு எப்போது ஏற்படும் என்பதை https://alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் அறியலாம்.

உண்மையான நண்பகல்

நண்பகல் என்றால் பெரும்பாலும் 12 மணியை தான் கூறுகிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக இருப்பதில்லை. நமது இந்திய திட்ட நேரம் கிரின்வீச் நேரத்தை விட 5.30 மணி நேரம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அலகாபாத்தில் மட்டுமே 12 மணிக்கு சூரியன் செங்குத் தாக அமையும். அந்தமான் தீவுகள் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் 12 மணிக்கு (அலகாபாத்தில்) முன்னரே சூரியன் செங்குத்தாக தோன்றும். தமிழகம், கேரளா போன்ற இடங்களில் 12 மணிக்கு பின்னரே சூரியன் செங்குத்தாக தோன்றுகிறது.

இதன்படி, நிழல் இல்லாத நேரம் வரும் 14-ம் தேதி விருதுநகரில் பகல் 12.18 மணி, 15-ல் மதுரை 12.17 மணி, 16-ல் திண்டுக்கல் 12.18 மணி, 17-ல் திருச்சி 12.15 மணி, 18-ல் கோவை 12.21 மணி, 19-ல் ஈரோடு 12.18 மணி, 20-ல் கடலூர் 12.10 மணி, 21-ல் தி.மலை 12.12 மணி, 23-ல் காஞ்சி 12.09 மணி, 24-ல் வேலூர் 12.11 மணி, சென்னையில் 12.07 மணியளவிலும் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x