Published : 24 Apr 2018 09:11 AM
Last Updated : 24 Apr 2018 09:11 AM

பொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி ஆன்லைன் பதிவு தொடக்கம்; இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம்- உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2018-2019-ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வரும் கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு நவம்பர் 29-ம் தேதி வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடையும். ஆன்லைன் கலந்தாய்வுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு ஜுன் முதல் வாரத்திலும் ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்திலும் தொடங்கும்.

மே 16-ம் தேதி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் சிறிய அளவில் மாற்றம் இருந்தால் மேற்கண்ட அட்டவணைப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்கிவிடும். ஒருவேளை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தள்ளிப்போகக் கூடிய சூழல் ஏற்பட்டாலோ, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சற்று தாமதமானாலோ பொறியியல் மாணவர் சேர்க்கை அட்டவணையில் மாற்றம் வரும்.

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடி பதிவுசெய்து கொள்ளலாம். வெளியில் தனியார் கணினி மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. வீட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்களுக்காக குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42 மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று இலவசமாக ஆன்லைனில் பதிவுசெய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் முகவரி, கலந்தாய்வு கோடு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, ஆன்லைன் கலந்தாய்வு குறித்து மாணவர்களுக்கு வீடியோ மூலம் விளக்கம் அளிக்கப்படும்.

குறிப்பிட்ட நாளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராத மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை மையங்களில் கடைசியாக ஒருநாள் அவகாசம் அளிக்கப்படு்ம். அப்போதும் அவர்கள் வரவில்லை எனில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம். உடல்நலக் குறைவு உள்ளிட்ட ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தினால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் வரமுடியவில்லை எனில், அவர்கள் சார்பில் பெற்றோர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

வழக்கமாக ஆன்லைன் பதிவு விண்ணப்பத்தை மாணவர்கள் நேரிலோ, தபால் மூலமாக சமர்ப்பிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அதுபோன்று அனுப்பத் தேவையில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திலே ஆன்லைன் பதிவு விண்ணப்பத்தில் போட்டோ ஓட்டி, கையெழுத்திட்டு சமர்த்துவிடலாம். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார். பேட்டியின்போது உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x