Published : 14 Apr 2018 05:06 PM
Last Updated : 14 Apr 2018 05:06 PM

காஷ்மீர் சிறுமி ஆசிஃபாவுக்கு நேர்ந்த கொடுமை; வகுப்பறை பேச்சுப் பயிற்சியில் பேசிய கோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட்

 காஷ்மீரில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபா குறித்து வகுப்பறையில் பேசிய கோவை சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி பிரியா என்பவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருபவர் மாணவி பிரியா. நேற்று கல்லூரியில் ஆங்கில வகுப்பில் மேடைப் பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய பிரியா தற்போது இந்தியா முழுவதும் பெரிதும் பேசப்படும் காஷ்மீரில் கூட்டு பாலியல் வன்முறையில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபாவுக்கு நடந்த கொடுமையைப் பற்றிப் பேசியுள்ளார்.

அப்போது அங்கு வந்த அக்கல்லூரி உதவிப் பேராசிரியர், வகுப்பறையில் இருந்த பேராசியர் மாணவி பிரியாவை திட்டியதுடன், வகுப்பறையில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பிரியா பேசியதாக முதல்வரிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பிரியா, காலம் குறிப்பிடாமல் தற்காலிகமாக கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தன்னை இடை நீக்கம் செய்தது குறித்து மாணவி பிரியா கூறுகையில், ''ஆசிஃபா உயிரிழந்ததற்கும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும், பெண்கள் அணியும் உடை காரணமல்ல, பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சமூகமே காரணம் என்றே நான் பேசினேன்.

ஆனால் தன் மீது பாலினம் மற்றும் மத ரீதியான மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக வீண் குற்றம் சுமத்தி இடை நீக்கம் செய்துள்ளனர். இது குறித்து கல்லூரி முதல்வர் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. தேதி குறிப்பிடமால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் தேர்வை எழுவதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயமும், பயமும் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை அரசு சட்டக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கோவை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி பிரியா நேற்று வகுப்பறையில் மாணவர்களுக்கிடையே மத ரீதியாக மோதல் ஏற்படும் வண்ணம் பேசியுள்ளார். மேலும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை போராட வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

மாணவியின் இந்த செயல் மாணவர்களிடையே மத ரீதியான மோதலை உண்டாக்கும் சூழலை உருவாக்கியுள்ளதால், இன்று முதல் (நேற்று) அந்த மாணவியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பில் அனுமதி பெற்று பேச்சுப்பயிற்சிக்காக பேசப்பட்ட ஒன்று, ஜனநாயக முறைப்படி சுய கருத்துகளை தெரிவிக்கக்கூட சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மாணவி பிரியா தெரிவித்தார். தான் இடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x