Published : 20 Apr 2018 08:09 AM
Last Updated : 20 Apr 2018 08:09 AM

சமண சமய நெறிப்படி இன்று விழுப்புரத்தில் 27 வயது இளம்பெண் துறவறம்

சமண மத நெறிப்படி, விழுப்புரத்தில் இன்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் துறவறம் மேற்கொள்கிறார்.

மகாராஷ்டிரம் மாநிலம், ஜல்காம் அருகே உள்ள நந்துர்பார் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளம்பெண் தீபா ஜெயின். பிஎஸ்ஸி, எம்எல்டி (பேத்தாலஜி) படித்துள்ள இவர், இன்று விழுப்புரத்தில் துறவு ஏற்க உள்ளார். இவருக்கு பெற்றோர் இல்லை. சமண மத குருதேவர் ஸ்ரீ வியராஜ்ஜியின் சிஷ்யர் ஸ்ரீவினோத் முனிஜி, தீபா ஜெயினுக்கு தீட்சதை வழங்கி துறவு வாழ்க்கையைத் தொடக்கி வைக்கிறார்.

அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம்

துறவறத்தை ஏற்பதற்கு முன்னதாக, நேற்று காலை விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீ சுஸ்வானி மாதா ஜினாலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் தீபா, விலை உயர்ந்த ஆடை, அணிகலன்களுடன் பல்லக்கில் அமர வைக்கப்பட்டு விழா நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் சமண மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மேலும், வரும் 27-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் துறவறம் மேற்கொள்ள உள்ள விழுப்புரத்தைச் சேர்ந்த அபேக்குமார் ஜெயின் மற்றும் விரைவில் துறவறம் மேற்கொள்ள உள்ள கர்நாடக மாநிலம், மேல்பாலாப்பூரைச் சேர்ந்த கிரிஷ்மா ஜெயின் ஆகியோரும் இந்த ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து சமண குழுத் தலைவர் கியான் சந்த் போரா கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டியைச் சேர்ந்த ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தில் துறவறம் மேற்கொண்டார். ஸ்ரீவினோத் முனிஜி விழுப்புரத்தில் பிறந்தவர். 1989-ல் இவர் 2 சகோதரிகளுடன் துறவறம் மேற்கொண்டார். தற்போது தீபாவுக்கு தீட்சதை அளிக்க உள்ளார்.

பிச்சை, வெள்ளை ஆடை

தீபா, துறவறம் மேற்கொண்ட பின்பு மின்சாரம், செல்போன் உள்ளிட்ட எந்த வசதியையும் பயன்படுத்த மாட்டார். காசு, பணம் எதையும் வைத்து கொள்ளமாட்டார். காலில் செருப்பு இல்லாமல் நடக்க வேண்டும். வாகனங்களில் செல்ல மாட்டார். பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும். வெள்ளை உடை மட்டுமே அணிவார்கள். நவதானியங்களை மட்டுமே அதிகமாக உட்கொள்வார்கள். துறவறம் மேற்கொள்வோர் குளிக்க மாட்டார்கள். ஆனால், அவர்களிடம் இருந்து எவ்வித துர்நாற்றமும் வராது. துறவறம் மேற்கொண்டவர்கள் எவ்வித மத வேறுபாடும் இல்லாமல், அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு விதைப்பார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x