Published : 26 Apr 2018 07:38 AM
Last Updated : 26 Apr 2018 07:38 AM

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர் போராட்டம் தீவிரம்; 50 பேர் மயக்கம்- மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. உடல் சோர்வு மற்றும் மயக்கம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 1.6.2009-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்குப் பின்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம வேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஊதிய முரண்பாட்டை சரிசெய் யக் கோரி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த திங்கள்கிழமை குடும்பத்தோடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத் தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின் னர் அங்கிருந்து வள்ளுவர் கோட் டம் அருகேயுள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக நேற் றும் தொடர்ந்தது. குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். உடல் சோர்வு ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து ஆசிரியர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை செயலா ளர் பிரதீப் யாதவை தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினார். ஆசிரியர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அவரிடம் எடுத்துரைத்தார். உடனடியாக அரசின் கவனத்துக்கு உண்மை நிலவரங்களை கூறி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்போது கேட்டுக் கொண்டார்.

மேலும் காங்கிரஸ் குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறும்போது, “எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடரும். ஊதிய முரண்பாடு பிரச்சினை தொடர் பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். ஊதிய முரண்பாடு சரிசெய்யப்படும் என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x