Published : 16 Apr 2018 09:23 AM
Last Updated : 16 Apr 2018 09:23 AM

பாளையங்கோட்டையில் ரூ.83 கோடியில் செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையம்: இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல் நாட்டினார்

பாளையங்கோட்டையில் ரூ.83 கோடி மதிப்பில் செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையம் அமைக்க இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல் நாட்டினார்.

பாளையங்கோட்டை ஐஎன்எஸ் கடற்படை தள வளாகத்தில் செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையம் (சேட்டிலைட் எர்த் ஸ்டேஷன்) அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் சிவன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேலைவாய்ப்பு கிடைக்கும்

செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை சேகரிக்கும் மையங்கள் வட மாநிலங்களில் உள்ளன. அது போன்ற மையம் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட உள்ளது. ரூ.83 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த மையத்தின் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சந்திராயன் 2 செயற்கைக்கோளை சந்திரனுக்கு அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்திரனில் ரோபோவை இறக்கி ஆய்வு செய்ய, சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இது முடிந்தவுடன் வரும் அக்டோபர் மாதத்தில் சந்திராயன் 2 செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

ஜி-சாட் 29 செயற்கைக்கோள்

அடுத்ததாக ஜி-சாட் 29 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் அதிவேக இணையதள வசதிக்காக அனுப்பப்படுகிறது. இதனால், கிராமப்புற மக்களுக்கு அதிவேக தகவல் தொடர்பு வசதிகள் கிடைக்கும்.

கல்வி நிறுவனங்கள் மூலம் புதிதாக செயற்கைக்கோள் செலுத்த ஆலோசனைகளை கொடுத்தால் அதனை பயன்படுத்தி, செயற்கைக்கோள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேவிக் சேட்டிலைட் ரிசீவரை மேம்படுத்தி உள்ளோம். அதனை கல்வி நிறுவனங்களுக்கு கொடுத்து, மாணவர்கள் மூலம் அதை பயன்படுத்தி புதிய அப்ளிகேஷன்களை உருவாக்கும் திட்டங்கள் உள்ளன.

விண்ணில் ஏவப்பட்ட 2 நாளில் ஜி சாட் 6ஏ செயற்கைக்கோளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த செயற்கைக்கோள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் அதனுடன் தகவல் தொடர்பு இணைக்கப்படும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x