Published : 26 Apr 2024 04:54 AM
Last Updated : 26 Apr 2024 04:54 AM

தமிழக உள் மாவட்டங்களுக்காக பெங்களூருவில் புதிய ரேடார்: நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை அறிவிப்புகளை வழங்க திட்டம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் 80-வது ஆண்டு விழா சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் பங்கேற்று விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து முன்னாள் தென் மண்டலத் தலைவர்கள் என்.ஜெயந்தி, ஏ.கே.பட்நாகர், எஸ்.கே.சுப்பிரமணியன், ஆர்.வி.சர்மா, ஒய்.இ.ஏ.ராஜ், முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் ஆகியோரை கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் பங்கேற்று பேசியபோது, தமிழகம் வெள்ளம், புயல், வறட்சி, மேக வெடிப்பால் ஏற்படும் குறுகிய காலத்தில் கொட்டித்தீர்க்கும் அதிகனமழை போன்றவற்றால் பாதிக்கக்கூடிய மாநிலமாக உள்ளது. அரசு சார்பில் 1400 மழை மானிகள், 150 தானியங்கி வானிலைமையங்களை அமைக்க இருக்கிறோம். அந்த தரவுகளை கொண்டு வானிலை எச்சரிக்கையின் துல்லியத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

பின்னர் மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில் 10 சதுர கி.மீஅளவில் வானிலை எச்சரிக்கைகளை வழங்கும் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தற்போது மாவட்ட அளவில் மழை தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கி வருகிறோம்.

அதை தாலுகா மற்றும் கிராம அளவில் வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அதாவது 1 சதுர கி.மீ பரப்பளவில் துல்லியமாக வழங்க முடியும். உலகில் எந்த நாட்டிலும் அப்படி வழங்கவில்லை. வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்த கூடுதல் வானிலை கண்காணிப்பு கருவிகளை நிறுவ இருக்கிறோம்.

கணினி மாதிரியின் தரத்தையும் மேம்படுத்த இருக்கிறோம். வளி மண்டல மேலடுக்கின் நிலையை அறிய தற்போது நாடு முழுவதும் 59 இடங்களில் தினமும் 2 முறை பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. இதற்கு பதிலாக நாளொன்றுக்கு 10 முறை அளவிட, பலூன்களுக்கு பதிலாக இதர தொழில்நுட்பங்கள், கருவிகளைப் பயன்படுத்த இருக் கிறோம்.

தற்போது நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. முன்பு 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடிந்தது. இப்போது இதே வெப்பநிலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் காற்றில் ஈரப்பதம் அதிகமாகி இருப்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொஹபாத்ரா கூறும்போது, ஓராண்டுக்குள் பெங்களூருவில் நவீன ரேடார் அமைக்கப்பட உள்ளது. இது தமிழக உள் மாவட்டங்களின் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த உதவியாக இருக்கும். எங்கள் தரவுகளை கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை போன்றவை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன என்றார்.

தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, தமிழக அரசு சார்பில் 3 இடங்களில் ரேடார் அமைக்க, வானிலை ஆய்வு மையம் மூலமாக தொழில்நுட்ப உதவிகள் வழங்கி, இடங்களை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், என்ஐஓடி இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x