Last Updated : 20 Aug, 2014 10:03 AM

 

Published : 20 Aug 2014 10:03 AM
Last Updated : 20 Aug 2014 10:03 AM

தமிழகத்தில் புதிய வாக்காளர்களுக்கு செப்டம்பர் முதல் வண்ண அடையாள அட்டை

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு வரும் செப்டம்பர் முதல் கையடக்க வண்ண அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் கருப்பு-வெள்ளை வாக்காளர் அடையாள அட்டை, எளிதில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விடுகிறது. இதனால் வாக்காளர்களுக்கு ‘பான்கார்டு’ அளவில் எளிதில் உடையாத, தண்ணீரில் அழியாத வண்ண பிளாஸ்டிக் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நீளவாக்கில் உள்ள இந்த புதிய அட்டைகள், 8.6 செ.மீ. நீளமும்,5.4 செ.மீ. அகலமும் உடையதாக இருக்கும்.

தமிழகத்திலும் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற் கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. அடையாள அட்டைகளை அச்சடிப் பதற்காக, 2 நிறுவனங்களை டெண்டர் மூலம் எல்காட் தேர்வு செய்துள்ளது. தமிழகத்தை கோவை, சென்னை, திருச்சி, மதுரை, சேலம் என 5 மண்டலங்களாக பிரித்து, வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடும் பணி நடக்கவுள்ளது. ஒரு நிறுவனம் 3 மண்டலங்களிலும், மற்றொரு நிறுவனம் மீதமுள்ள 2 மண்டலங்களிலும் அலுவலகங் களை அமைத்து புதிய அட்டை களை அச்சடித்து விநியோகிக்கும்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் விவரங்களை கொண்ட டிசைன் இறுதி செய்யப்பட்டுவிட்டது. விரைவில், வண்ண அடையாள அட்டை அச்சடிப்புப் பணிகள் தொடங்கவுள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் துறையினர் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி சுமார் 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பழைய முறையிலேயே கருப்பு-வெள்ளை நிற வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

தேர்தலுக்குப் பிறகு பெயர் சேர்க்கக் கோரி மனு செய்தவர்களுக்கு புதிய வண்ண அட்டைகள் வழங்கப்படும்.

புதிய வாக்காளர் அட்டைக்கான டிசைன் இறுதி செய்யப்பட்டு, சோதனையும் முடிந்துவிட்டது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 2 தனியார் நிறுவனங்களும் அந்தந்த மாவட்டங்களில் தங்களது அலுவலகங்களை அமைத்து, அங்கேயே அட்டைகளை அச்சிட்டு ஆட்சியர் அலுவலத்தில் மொத்தமாக ஒப்படைத்துவிடுவர். செலவு அதிகம் என கருதும்பட்சத்தில் அவற்றை மொத்தமாக ஒரே இடத்தில் வைத்தும் அச்சிட்டுக் கொள்ளலாம். ஆனால், 48 மணி நேரத்துக்குள் புதிய அட்டைகளை அச்சடித்துத் தரவேண்டும். இந்நிறுவனங்களுடன் 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மனு செய்த அனைவருக்கும் புதிய வண்ண வாக்காளர் அட்டைகளே விநியோகிக்கப்படும். ஏற்கெனவே பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு, புதிய அட்டைகள் பின்னர் வழங்கப்படும்.

இவ்வாறு தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x