Published : 04 Apr 2018 08:45 PM
Last Updated : 04 Apr 2018 08:45 PM

அறவழியில் போராட வேண்டுமே தவிர உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது: ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கவும் அறவழியில் போராட வேண்டுமே தவிர உயிர் தியாகம் செய்யும் விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பிரபு என்ற இளைஞர் விஷமருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்ட செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி உரிமையும் தமிழக மக்களின் உயிர்நாடிப் பிரச்சினை என்பதும், உணர்வுகளுடன் கலந்துள்ளது என்பதும், தன்னெழுச்சியாக ஜனநாயக முறையில் அறவழியில் நடைபெறும் போராட்டங்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்துதான் திமுக அறவழிப் போராட்டத்தை அமைதியாக நடத்தி வருகிறது. 1.4.2018 முதல் காவிரிக்காக ஒரு சிறிய வன்முறைக்குக் கூட இடமளிக்காமல், திமுக ஜனநாயக வழியில் போராட்டத்தை நடத்தி வருவதை இந்த நேரதில் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

ஜனநாயகரீதியிலான போராட்டங்களுக்குப் பதிலாக, பிரபு போன்று உயிர் தியாகம் செய்யும் விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மதுரையில் ஏற்கெனவே நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோவின் நடைபயணம் நடத்தும் நிலையில், ரவி என்ற மதிமுக தொண்டர் தீக்குளித்து தன் இன்னுயிரை தியாகம் செய்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், காவிரிக்காக இப்போது பிரபு தனது இன்னுயிரை தியாகம் செய்திருப்பது மனதை பேரிடி கொண்டு தாக்குகிறது.

இதுபோன்ற இளைஞர்களும், உணர்வாளர்களும் உயிருடன் இருந்து தமிழக மக்களுடன் அறவழியில் நின்று போராடி, தமிழக உரிமைகளை மீட்டிட வேண்டும் என்பதே திமுகவின் எண்ணம் மட்டுமல்ல, தலைவர் கருணாநிதி வகுத்துக் கொடுத்த அறவழிப் போராட்டப் பாதையின் இலக்கணம் என்பதை இந்தநேரத்தில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

ஆகவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழ்நாட்டிற்கு பாதிப்பு அளிக்கும் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்ப்பதிலும், அறவழியில் நின்று போராட வேண்டுமே தவிர, தீக்குளிப்பு, விஷமருந்துதல் போன்ற செயல்களில் தயவுசெய்து யாரும் ஈடுபட்டு, தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x