Published : 18 Apr 2024 06:20 AM
Last Updated : 18 Apr 2024 06:20 AM

மின்சாரம் துண்டித்து வட சென்னையில் திமுக பணப் பட்டுவாடா: தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்

திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூவிடம் புகார் மனு அளித்த வட சென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜ், பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள்.

சென்னை: வட சென்னை தொகுதில் திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர் எனத் தமிழக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த முறை போலவே இப்போதும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். திமுக கூட்டணி தோற்கப்போகிறது என்ற அச்சத்தில், ஆட்சி அதிகாரம், பண பலம், அடியாள் பலம் அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

முதல்வரின் தொகுதியில்.. வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பணப் பட்டுவாடா தாராளமாக நடந்து வருகிறது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில்தான் அதிகளவு பணப் பட்டுவாடா நடந்து வருகிறது.எங்கெல்லாம் பணப் பட்டுவாடா நடக்கிறதோ அங்கெல்லாம் மின்சாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுப் போட பணம்கொடுத்து வருகிறார்கள். பணம் கொடுக்கும் திமுகவினருக்கு காவல் துறையினரும் உடந்தை.

பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடியவர்கள், பணத்துக்காக வாக்களிப்பவர்கள் அல்ல, அவர்கள் நாட்டுக்காக, தேசியத்துக்காக வாக்களிக்கக் கூடியவர்கள். இதுதிமுகவினருக்கு நன்கு தெரியும்.

துணை ராணுவ பாதுகாப்பு: எனவே, வாக்குப்பதிவு நாளன்று அவர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க பல்வேறு அராஜகங்களை கட்டவிழ்த்து விட வாய்ப்புள்ளது.

எனவே, வடசென்னைமக்களவைத் தொகுதியில் குறிப்பாக கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் துணை ராணுவப்படையினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x