Published : 17 Apr 2024 02:45 PM
Last Updated : 17 Apr 2024 02:45 PM

நவாஸ் கனி Vs ஓபிஎஸ் - ராமநாதபுரம் ‘டஃப்’ களத்தில் முந்துவது யார்? - ஒரு பார்வை

சிட்டிங் எம்,பி நவாஸ் கனி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களத்தில் நேரடியாக மோதுவதால் ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக பா.ஜெயபெருமாள், பாஜக கூட்டணியில் சுயச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களம் காணுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக சந்திரபிரபா ஜெயபால் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

கடந்த முறை வென்றது எப்படி? - கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 4,69,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இரண்டாம் இடம் பிடித்தார்.பாஜக எதிர்ப்பு அலை திமுக கூட்டணிக்கு ஆதரவாக அமைந்தது. குறிப்பாக, சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது பாஜக என்னும் விமர்சனம் பிற கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. அங்கு நேரடியாகப் பாஜக வேட்பாளர் களமிறங்கியதால் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உள்ள ராமநாதபுரம் பகுதி நவாஸ் கனிக்கு சாதகமாக அமைந்தது.

2024-ம் ஆண்டு களம் எப்படி இருக்கிறது ? - கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருச்சுழி ஆகிய தொகுதிகளை திமுகவும், திருவாடானை, அறந்தாங்கி தொகுதிகளைக் காங்கிரஸ் கட்சியும் வென்றன. எனவே, திமுக கூட்டணி இங்கு பலமாகவுள்ளது. தவிர, ராமநாதபுரம் தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், இஸ்லாமியர்கள் கணிசமாகவும், யாதவர், நாடார், கிறிஸ்துவர் ஆகிய சமூக மக்களும் இருக்கிறார்கள்.

கடந்த தேர்தலில் ’அதிமுக - பாஜக’ கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்தித்தது. அதனால், சிறுபான்மையினர் பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், இம்முறை அந்த வாக்குகள் தனித்துப் போட்டியிடும் அதிமுகவுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி மக்களிடம் பரிச்சயமுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார். இங்கு களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தைப் பாஜக கூட்டணியில் இருப்பவர் என்பது போல் பார்க்காமல் அவரின் தனித்த செல்வாக்கை மக்கள் உற்றுநோக்குகின்றனர். ஆகவே, அவருக்கு இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கி, தனித்த செல்வாக்கு அவருக்கு இங்கு கணிசமான வாக்குகளைப் பெற்று தரும்.

அதிமுக, ஓபிஎஸ் என இரு துருவ போட்டி, சிட்டிங் எம்பி நவாஸ் கனிக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தலாம். அதிமுகவுக்கு வாக்குகள் அதிகமாகப் பிரிவது திமுக கூட்டணிக்கு பாதகமாகவும் மாறலாம். ஆகவே, இத்தொகுதியில் அதிகமாகவே உழைத்து வருகிறது திமுக.

அதிமுக நிலை என்ன? - அதிமுக வேட்பாளர் ஜெயபால் களத்தில் இருக்கிறார். பாரம்பரிய எதிர்க்கட்சி மற்றும் அதிமுகவின் கட்டமைப்பும் சின்னமும் அவருக்குச் சாதகமாக உள்ளன. அவருக்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் களமாடி வருகின்றனர். அதிமுகவின் அரசியல் எதிரியான ஓபிஎஸ்ஸைத் தோற்கடித்தாக வேண்டும் என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தீவிரம் காட்டி வருவதால் தொகுதியில் பிரச்சாரம் சூடு பறக்கிறது.

குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்குகளைக் கவரவும் சில யுக்திகளை அதிமுக கையாள்கிறது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் வருவதற்கு ஓபிஎஸ் தான் காரணம். எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றியே ஓபிஎஸ் தன்னிச்சையாக முடிவெடுத்து, பாஜகவின் சிஏஏ சட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ஆதரவு அளிக்க சொன்னார் எனக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்எஸுக்குப் பின்னடைவைத் தரும் என அதிமுக நினைக்கிறது.

நாம் தமிழர் கட்சி நிலை என்ன? - நாம் தமிழர் கட்சி சார்பாகச் சந்திர பிரபா ஜெயபால் களத்தில் உள்ளார். மீனவர் பிரச்சினை, தமிழர் உரிமை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி அவர்களுக்குக் கைகொடுக்கும்.

ஓ.பன்னீர்செல்வம் நிலை என்ன? - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஓபிஎஸ் தாமரை சின்னத்தில் போட்டியிட அக்கட்சி அழுத்தம் கொடுத்தது. ஆனால், முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவை மீட்க சட்டப்போராட்டம் நடத்தும் நிலையில் அவர் இன்னொரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் சரியிருக்காது என அடம்பிடித்து சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். ஆனால், அவர் பெயரிலையே 5 பேர் தொகுதியில் போட்டியிடுவதால் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆனால், அது அவருக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே சொல்லப்படுகிறது.

தன் சின்னமான பலாப்பழத்தை மக்களிடம் ஓரளவு கொண்டு சேர்ந்துள்ளார் ஓபிஎஸ். இவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். தனக்கு முக்குலத்தோர் மக்களிடம் இருக்கும் செல்வாக்கை நம்பி களத்தில் நிற்கிறார் ஓபிஎஸ்.

தொகுதி பிரச்சினை என்ன? - பல ஆண்டுகளாகவே இந்தத் தொகுதியில் வேலை வாய்ப்பில்லாமல் பிழைப்புத் தேடி லட்சக்கணக்கானோர் பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்வது வாடிக்கையாகி போனது. ஆனால், வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் விமான நிலையம், மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி - தனுஷ்கோடி இடையே இன்னும் நான்கு வழிச்சாலை அமைக்காதது போன்றவை நீண்டகால குறைகளாக உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதற்கும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தங்கச்சி மடத்தில் ஒருங்கிணைந்த துறைமுகம் கொண்டுவருவதற்கு மீன்வளத் துறைச் செயலாளரைச் சந்தித்து எம்பி கோரிக்கை வைத்திருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முயற்சிகள் எதையும் செய்யவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் சிட்டிங் எம்பி நவாஸ் கனி மீது வைக்கப்படுகிறது.

திமுக கூட்டணியின் நிலை என்ன? - ராமநாதபுரத்துக்கு மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டது, ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு, தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினை தீர்க்கப் பேச்சுவார்த்தை என முக்கியமான பணிகளை எம்பி செய்திருக்கிறார் என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எதிர்க்கட்சி எம்பியாக இருந்ததால் எந்தத் திட்டமும் மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை என சிட்டிங் எம்பி கூறுகிறார்.

இருப்பினும் நிறைவேற்றப்படாத வாக்குறுதியால் மக்கள் சற்று அதிருப்தியில் இருக்கின்றனர். எனினும், பெரும் பலம்வாய்ந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சுறுசுறுப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நவாஸ் கனி.

மக்களின் அதிருப்தியைப் பிற கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். அதனால், சிட்டிங் எம்பிக்கு எதிராத தீவிரமாகக் களமாடி வருகின்றனர். கடந்த முறை நாவஸ் கனிக்கு வந்த சிறுபான்மையினர் வாக்கை அதிமுகவும், முக்குலத்தோர் வாக்குகளை ஓபிஎஸ் பிரிப்பதால் நாவஸ் கனிக்கு கூடுதல் சிக்கல் எழலாம்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ள நவாஸ் கனிக்கும், பாஜக கூட்டணியில் உள்ள ஓபிஎஸ்எஸுக்கும் இடையே தான் கடுமையான போட்டி நடக்கிறது. குறிப்பாக, ராமநாதபுரத்தில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் என்பதால் அது ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமையும். அதேவேளையில் திமுகவும் இங்கு தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதால் இருவருக்கும் இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. தேர்தல் நெருங்கும்போது மக்கள் மனநிலை என்ன என்பது வெளிப்படும் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x